திருநீற்றுப்புதன் திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் திருநீற்றுப்புதன் திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் 

தவக்காலத்தையொட்டி திருத்தந்தையின் டுவிட்டர் பதிவுகள்

"இந்த மனமாற்றத்தின் காலத்தில், நமது நம்பிக்கையைப் புதுப்பிப்போம், எதிர்நோக்கின் வாழும் நீரிலிருந்து சக்திபெறுவோம், நம் அனைவரையும் சகோதரர்களாக, சகோதரிகளாக, திறந்த மனதோடு ஏற்றுக்கொள்வோம்"

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிப்ரவரி 17 இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட திருநீற்றுப்புதனுடன் ஆரம்பமான தவக்காலத்தை மையமாக்கி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதனன்று 4 டுவிட்டர் செய்திகளையும், இவ்வியாழனன்று ஒரு டுவிட்டர் செய்தியையும் வெளியிட்டுள்ளார்.

"பொறுமையுள்ள இறைவனை நோக்கி நம் பார்வையைத் திருப்பும்போது,  தவக்காலம் திட்டவட்டமாக நம்பிக்கையின் காலமாக அமைகிறது. "கடவுளோடு ஒப்புரவாகுங்கள்" (2 கொரி. 5:20) என்ற சொற்கள் வழியே, ஒப்புரவில் நம்பிக்கை கொள்ளுமாறு புனித பவுல் நம்மை தூண்டுகிறார்" என்ற சொற்களை, திருத்தந்தை இவ்வியாழனன்று தன் டுவிட்டர் பதிவாக வெளியிட்டார்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 17, புதனன்று, தன் முதல் டுவிட்டர் செய்தியை, தவக்காலத்தை மையப்படுத்தி வெளியிட்ட வேளையில், அந்த டுவிட்டர் செய்தியுடன், தான் வழங்கியிருந்த தவக்கால செய்தியை வாசிப்பதற்கு உதவியாக, அச்செய்தியின் இணையதள முகவரியை இணைத்திருந்தார்.

"இந்த மனமாற்றத்தின் காலத்தில், நமது நம்பிக்கையைப் புதுப்பிப்போம், நம்பிக்கையின் வாழும் நீரிலிருந்து சக்திபெறுவோம், நம் அனைவரையும் சகோதரர்களாக, சகோதரிகளாக உருவாக்கும் இறைவனின் அன்பை, திறந்த மனதோடு ஏற்றுக்கொள்வோம்" என்ற சொற்கள், திருத்தந்தை வெளியிட்ட முதல் டுவிட்டர் பதிவில் இடம்பெற்றிருந்தன.

இதைத் தொடர்ந்து, இப்புதனன்று, திருத்தந்தை வழங்கிய திருநீற்றுப்புதன் மறையுரையிலிருந்து மூன்று கருத்துக்களை, மூன்று டுவிட்டர் செய்திகளாக வெளியிட்டார்.

மேலும், திருநீற்றுப் புதனன்று, பிரேசில் நாட்டில் துவக்கப்பட்ட கிறிஸ்தவ ஒன்றிப்பு உடன்பிறந்த நிலை கொள்கைப் பரப்பு முயற்சியைப் பாராட்டி செய்தியொன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செய்தியில் கூறியுள்ள ஒரு கருத்தை, போர்த்துகீசிய மொழியில், தன் 5வது டுவிட்டர் பதிவாக, இப்புதனன்று வெளியிட்டார்.

ஒவ்வொரு நாளும், @pontifex என்ற வலைத்தள முகவரியில், திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

பிப்ரவரி 18, இவ்வியாழன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 3,079 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 88 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி, @franciscus என்ற பெயரில் இயங்கிவரும் instagram தளத்தில், அவர் திருநீற்றுப்புதனன்று நிறைவேற்றிய திருப்பலியில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் உட்பட, இதுவரை வெளியான புகைப்படங்கள், மற்றும், காணொளிகள், 1,019 என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 76 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 February 2021, 14:27