பிறரன்பு பிறரன்பு 

பெருந்தொற்றால் துன்புறும் மக்களுக்கு பிறரன்பு

அன்போடு தவக்காலத்தை அனுபவிப்பது என்பது, கோவிட்-19 பெருந்தொற்றால் கைவிடப்பட்டதாக உணரும் மக்களைப் பராமரிப்பதாகும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“தவக்காலம்: நம்பிக்கை, எதிர்நோக்கு, மற்றும், அன்பைப் புதுப்பிப்பதற்கு உள்ள ஒரு காலம்” என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு தவக்காலத்திற்கென எழுதியுள்ள செய்தி, பிப்ரவரி 12, இவ்வெள்ளியன்று, மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

மனமாற்றத்தின் காலமாகிய இத்தவக்காலத்தில், எதிர்நோக்கின் உயிருள்ள தண்ணீரையும், கிறிஸ்துவில் நம்மை சகோதரர், சகோதரிகளாக ஆக்குகின்ற கடவுளன்பை திறந்த மனதோடும் பெற்று, நம் நம்பிக்கையைப் புதுப்பிப்போம் என்று திருத்தந்தை இச்செய்தியில் கூறியுள்ளார்.

“இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம்” (மத்.20:18) என்ற இயேசுவின் திருச்சொற்களை அடிப்படையாக வைத்து திருத்தந்தை தயாரித்துள்ள இச்செய்தியில், உண்ணாநோன்பு (ஏழ்மை மற்றும், தன்னலமறுப்பின் பாதை), இறைவேண்டல் (குழந்தை போன்று இறைத்தந்தையோடு உரையாடல்) மற்றும், தர்மம் செய்தல் (வறியோரை அன்புடன் பராமரித்தல்) ஆகியவை, நம் மனமாற்றத்தை வெளிப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

நம்பிக்கை, உண்மையை ஏற்க அழைக்கின்றது

நம்பிக்கை, உண்மையை ஏற்க நம்மை அழைக்கின்றது, மற்றும், அது, கடவுள் மற்றும், அனைத்து சகோதரர், சகோதரிகள் முன்னிலையில் நம்மைப் பரிசோதிக்கின்றது என்று கூறியுள்ள திருத்தந்தை, கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்ட உண்மையை ஏற்பதும், வாழ்வதும் என்பது, திருஅவை, ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு வழங்கிவரும் இறைவார்த்தைக்கு திறந்த மனதாய் இருப்பதாகும் என்று கூறியுள்ளார்.

தன்னல-மறுப்பு வடிவில் மேற்கொள்ளப்படும் உண்ணாநோன்பு, எளிய உள்ளத்தில் கடவுளின் கொடையை கண்டுணர்ந்து, அதை ஏற்பவர்களுக்கு உதவுகின்றது  என்று கூறியுள்ள திருத்தந்தை, உண்ணாநோன்பைக் கடைப்பிடிப்பவர்கள், ஏழைகளோடு ஏழையாக தங்களை அமைத்துக்கொள்கின்றனர் என்று கூறியுள்ளார்.

தவக்காலம், நம்புவதற்கு உள்ள ஒரு காலம் என்றும், இக்காலத்தில், நம் வாழ்வில் கடவுளை வரவேற்கவும், நம் மத்தியில் அவர் வாழும் இடமாக அமைக்க அவரை அனுமதிக்கவும் அழைப்பு விடுக்கும் காலம் என்றும் கூறியுள்ள திருத்தந்தை, நுகர்வுத்தன்மை அல்லது, அதிகப்படியான தகவல், அது, உண்மையோ பொய்யோ அவை நம்மை அழுத்துவதிலிருந்து விடுதலைபெற உண்ணைநோன்பு உதவுகின்றது என்று குறிப்பிட்டுள்ளார். 

எதிர்நோக்கு, உயிருள்ள தண்ணீராக...

எதிர்நோக்கு, உயிருள்ள தண்ணீராக, நம் வாழ்வுப் பயணத்தைத் தொடர உதவுகின்றது என்றும், எல்லாமே நிச்சயமற்றும், பலவீனமாகவும் தெரியும், துன்பத்தின் இக்காலத்தில், எதிர்நோக்குப் பற்றிப் பேசுவது சவாலான ஒன்றுதான் எனினும், தம் படைப்புக்களைப் பராமரிப்பதற்காக பொறுமையோடு தொடர்ந்து செயல்படும் கடவுள் பக்கம் திரும்பும்போது, தவக்காலம், எதிர்நோக்கின் காலமாக உள்ளது என்று, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அமைதியாக இருந்து வாழ்வைத் திரும்பிப் பார்த்தல், மற்றும், அமைதியான இறைவேண்டல் வழியாக, எதிர்நோக்கு, நமக்கு உள்தூண்டுதலையும், உள்ளொளியையும் வழங்குகின்றது, நம் மறைப்பணியில் நாம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும், தெரிவுகளை ஒளிர்விக்கின்றது என்றுரைத்துள்ள திருத்தந்தை, எதிர்நோக்கில் தவக்காலத்தை அனுபவிப்பது பற்றியும் விளக்கியுள்ளார்.

அன்பு, கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி..

கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, அனைவர் மீதும் அக்கறை மற்றும், பரிவன்பு கொள்ளும் அன்பு, நம் நம்பிக்கை, மற்றும், எதிர்நோக்கின் உச்சகட்ட வெளிப்பாடு என்பதை, தன் செய்தியின் இறுதியில் விளக்கியுள்ள திருத்தந்தை, மற்றவர் வளர்வதைப் பார்க்கும்போது அன்பு மகிழ்கின்றது என்றும், அன்பு ஒரு கொடை, அது நம் வாழ்வுக்கு அரத்தம் கொடுக்கின்றது என்றும் கூறியுள்ளார்.

திருத்தந்தையின் இத்தவக்காலச் செய்தியை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் தலைமையிலான குழு வெளியிட்டது.

பிப்ரவரி17, வருகிற புதனன்று தவக்காலம் தொடங்குகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 February 2021, 15:31