'உடன்பிறந்த நிலையின் உலக நாள்' - மெய்நிகர் கூட்டத்தில் பங்கேற்றோர் 'உடன்பிறந்த நிலையின் உலக நாள்' - மெய்நிகர் கூட்டத்தில் பங்கேற்றோர் 

'உடன்பிறந்த நிலையின் உலக நாள்' - மெய்நிகர் கூட்டம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், உயர் குரு அல்-தய்யெப் அவர்களும் உடன்பிறந்த நிலை என்ற உண்மைக்காக எழுப்பிய குரல், உலகெங்கும், பல இலட்சம் மக்களின் மனசாட்சியை, விழித்தெழச் செய்துள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'மனித உடன்பிறந்த நிலையின் அனைத்துலக நாள்', பிப்ரவரி 4 இவ்வியாழனன்று, முதல் முறையாக சிறப்பிக்கப்பட்ட வேளையில், இணையவழி நடைபெற்ற மெய்நிகர் கூட்டம் ஒன்றில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், அல் அசார் உயர் குரு அகமத் அல்-தய்யெப் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

உரோம் நேரம் பிற்பகல் 2.30 மணிக்கு துவங்கிய இந்த மெய்நிகர் கூட்டத்தில், இவ்விரு தலைவர்களுடன், அபு தாபியின் இளவரசர் Mohammed bin Zayed அவர்களும், இந்த உலக விழாவையொட்டி வழங்கப்பட்ட Zayed சிறப்பு விருதுகளைப் பெற்ற, ஐ.நா. நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்களும், 'இளையோர் மற்றும் அமைதிக்காக இமாத்' (Imad) என்ற கழகத்தை நிறுவியுள்ள Latifah Ibn Ziaten என்ற பெண்மணியும் கலந்துகொண்டனர்.

இந்த மெய் நிகர் கூட்டத்தில் ஒரு சில நிமிடங்கள் உரையாற்றிய ஆங்கிலிக்கன் சபையின் உலகத் தலைவர், பேராயர் ஜஸ்டின் வெல்பி அவர்கள், திருத்தந்தையும், அல்-அசார் உயர் குருவும் வெளியிட்ட இந்த அறிக்கையின்  விளைவாக, நம்மிடையே நட்புணர்வு வளரவும் அதன் பயனாக ஆக்கப்பூர்வமான பணிகள் இவ்வுலகில் நடைபெறவும் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ஐரோப்பிய அவையின் தலைவராகப் பணியாற்றும் சார்ல்ஸ் மைக்கில் அவர்கள் வழங்கிய வாழ்த்துரையில், நாம் ஒருவரையொருவர் விட்டு விலகியிருக்கும்போது, நமக்குள் இருக்கும் வேறுபாடுகளே பெரிதாகத் தெரிகின்றன என்றும், ஒருவர் ஒருவரின் கண்களைக் காணும்போது, அடுத்தவரிடம் நம் சாயலைக் காணமுடியும் என்றும் கூறினார்.

இந்த இணையவழி கூட்டத்தை முன்னின்று நடத்திய Zayed விருதுக்குழுவின் தலைவர், நீதிபதி Mohamed Abdel Salam அவர்கள் தன் அறிமுக உரையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், உயர் குரு அல்-தய்யெப் அவர்களும் உடன்பிறந்த நிலை என்ற உண்மைக்காக எழுப்பிய குரல், உலகெங்கும், பல இலட்சம் மக்களின் மனசாட்சியை, விழித்தெழச் செய்துள்ளது என்று கூறினார்.

நீதிபதியின் அறிமுக உரையைத் தொடர்ந்து பேசிய, உயர் குரு அகமத் அல்-தய்யெப் அவர்கள், திருத்தந்தையும் தானும் இணைந்து கையொப்பமிட்ட உலகளாவிய மனித உடன்பிறந்த நிலை அறிக்கை, போர்களை நிறுத்துவதற்கும், சகிப்புத்தன்மை, மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கும் அழைப்பு விடுத்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

திருத்தந்தையுடன் இணைந்து, தானும், இன்னும், இவ்வுலகில் அமைதியை விரும்பும் அனைத்து நல்மனம் கொண்டோரும், இவ்வுலகில் அமைதியை நிலைநாட்ட உறுதியுடன் உழைப்போம் என்ற வாக்குறுதியுடன், உயர் குரு, தன் உரையை நிறைவு செய்தார்.

உயர் குருவைத் தொடர்ந்து பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடன்பிறந்த நிலை என்பது, நாம் வாழும் இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் சவால். அக்கறையற்று வாழ்வதற்கோ, பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் வண்ணம் கரங்களைக் கழுவிவிடுவதற்கோ தற்போது நேரம் இல்லை என்பதை வலியுறுத்தினார்.

உடன்பிறந்த நிலை என்பதன் பொருளை பல்வேறு செயல்பாடுகள் வழியே விளக்கிக்கூறியத் திருத்தந்தை, உடன்பிறந்த நிலை என்பது, கரங்களை நீட்டுதல், மதிப்பளித்தல், செவிமடுத்தல் என்ற செயல்கள் வழியே வெளிப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இவ்விருவரின் கருத்துரைகளைத் தொடர்ந்து, Zayed விருதுகள் அறிவிக்கப்பட்டன. 2021ம் ஆண்டுக்குரிய Zayed விருதினைப் பெற்ற ஐ.நா. அவையின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், தான், இந்த விருதை, ஐ.நா.வில் பணியாற்றும் அனைவரின் சார்பிலும், மிகுந்த பணிவுடன் பெற்றுக்கொள்வதாகவும், Latifah Ibn Ziaten அவர்களுடன் தான் இதைப் பெறுவதை மேன்மையானதாகக் கருதுவதாகவும் கூறினார்.

Zayed விருதினைப் பெற்றவர்களில் ஒருவரான Latifah Ibn Ziaten என்ற பெண்மணி, தன் வாழ்வில் ஏற்பட்ட வேதனைகளையும், அவற்றை விட்டு வெளியேற தான் பின்பற்றிய ஆக்கப்பூர்வமான வழிகளையும் பகிர்ந்துகொண்டார்.

Zayed விருதைப் பெற்ற இருவரையும் வாழ்த்திப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், உயர் குரு அகமத் அல்-தய்யெப் அவர்களும், இவ்விருவரும் தங்கள் வாழ்வாலும், பணிகளாலும் இவ்வுலகில் அமைதியையையும், உடன்பிறந்த உணர்வையும் வளர்த்துவருவதற்கு தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.

இந்த இணையவழி மெய்நிகர் கூட்டத்தில், ஒவ்வொருவரின் உரைக்கு நடுவே, பல்வேறு நாடுகளையும் மதங்களையும் சேர்ந்த  இளையோர் இணைந்து, இசை நிகழ்ச்சியை வழங்கினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 February 2021, 15:51