நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சுலாவேசி தீவு நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சுலாவேசி தீவு 

இந்தோனேசிய மக்களுக்காக திருத்தந்தை செபம்

சனவரி 15 இவ்வெள்ளியன்று, இந்தோனேசியாவின் சுலாவேசி தீவில் கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன், தனது அருகாமை மற்றும், செபங்களை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நம் வாழ்வுப் பயணத்தில், எப்போதும் கடவுளுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 16, இச்சனிக்கிழமையன்று, தன் டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“வாழ்வில், நாம் எப்போதும் பயணத்திலே உள்ளோம், அப்பயணத்தில் கடவுளின் பாதையைத் தேர்ந்துகொள்வோம், அப்போது, எதிர்பாராத நிகழ்வுகளோ, கடினமான பாதையோ கிடையாது, மற்றும், இயேசுவோடு எதிர்கொள்ள இயலாத இரவும் இருக்க முடியாது என்பதை நாம் கண்டுகொள்வோம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று இடம்பெற்றிருந்தன.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் ஒருமைப்பாடு

மேலும், சனவரி 15 இவ்வெள்ளியன்று, இந்தோனேசியாவின் சுலாவேசி தீவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன், தனது அருகாமை மற்றும், செபங்களை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரோடும் தனது உளமார்ந்த ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதாகவும், இந்தப் பேரிடரால் இறந்தவர்களின் ஆன்மாக்கள் நிறையமைதி அடையவும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணம்பெறவும் தான் இறைவனை மன்றாடுவதாகக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, தங்கள் உறவுகளின் இழப்பால் வருந்துவோருக்கு, தனது ஆறுதலைத் தெரிவிப்பதாகக்  கூறியுள்ளார்.

திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரில், இந்தோனேசியாவுக்கு அனுப்பியுள்ள தந்திச் செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

சனவரி 15, இவ்வெள்ளி நள்ளிரவுக்குப்பின், சுலாவேசி தீவில், 6.2 ரிக்டர் அளவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில், குறைந்தது 46 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் காயமுற்றுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 January 2021, 15:16