இயேசுவின் திருமுழுக்கு இயேசுவின் திருமுழுக்கு  

நாம் கடவுளின் பிள்ளைகளாக மாற, இறைவன் மனிதரானார்

இவ்வுலகில் தன் வாழ்வின் பெரும்பகுதியை எளிமையான ஒரு வாழ்வை வாழ்ந்து செல்ல இயேசு செலவிட்டது, நம்மைத் தொடுவதாக உள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இயேசு தன் துவக்க காலத்தில், தன் தனித்துவத்தை வெளிப்படுத்தாமல், இவ்வுலகில் தன் வாழ்வின் பெரும்பகுதியை எளிமையான ஒரு வாழ்வை மேற்கொண்டது, நம்மைத் தொடுவதாக உள்ளது என, சனவரி 11, இத்திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

'தன் வாழ்வின் பெரும்பகுதியை எளிமையாக வாழ்ந்து சென்ற இயேசுவின் எடுத்துக்காட்டு நம்மைத் தொடுவதாக உள்ளது. தினசரி வாழ்வின் மகத்துவத்தை இது வெளிப்படுத்துகின்றது, ஏனெனில், கடவுளின் கண்களுக்கு நம் ஒவ்வொரு செயலும், எவ்வளவு சிறியதாக இருந்தாலும்,  அது முக்கியத்துவம் நிறைந்தது' என்ற சொற்களை, தன் டுவிட்டர் செய்தியாக பதிவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் திருமுழுக்கு திருவிழாவான இஞ்ஞாயிறன்று நான்கு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் கடவுளின் பிள்ளைகளாக மாறும்பொருட்டு, இறைவன் மனிதனானார் என்பதே கிறிஸ்மஸின் மிகப்பெரும் அர்த்தம் என தன் ஞாயிறு முதல் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

'என் அன்பார்ந்த மகன் நீயே' என நம் ஒவ்வொருவரையும் நோக்கி இறைவன் உரைக்கிறார் என, தன் இரண்டாவது டுவிட்டரில் கூறும் திருத்தந்தை, இதுவே நம் ஆழமான தனித்துவ அடையாளம் என அதில் கூறியுள்ளார்.

தன் மூன்றாவது டுவிட்டரில், கோவிட் கொள்ளைநோய் கட்டுப்பாடுகள் காரணமாக, தான் இவ்வாண்டு, குழந்தைகளுக்கு, திருமுழுக்கு வழங்கமுடியாமல் போனதைக் குறிப்பிட்டு, இந்நாட்களில் திருமுழுக்கு பெறும் அனைத்துக் குழந்தைகளுக்காகவும் தான் செபிப்பதாக உறுதி கூறியுள்ளார்.

நான்காவதாக திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அமெரிக்க ஐக்கிய நாட்டில் கடந்த புதனன்று இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து கவலையை வெளியிட்டுள்ளதுடன், வன்முறைகளைக் கைவிட்டு, பொதுநலனை கட்டியெழுப்பும் நோக்கத்தை கொண்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 January 2021, 14:59