திருத்தந்தையின் செபக்கருத்து – மனித உடன்பிறந்த நிலை

திருத்தந்தை : ஏனைய மதநம்பிக்கை கொண்டோருடன் முழுமையான உறவுடன் வாழவும், ஒருவர் ஒருவருக்காக இறைவேண்டல் செய்யவும், நாம் ஆண்டவரை வேண்டுவோம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நாம் அனைவரும், உடன்பிறந்த உணர்வு கொண்டு ஒரே குடும்பத்தை அமைக்கும் கனவு காண்போம் என்ற கருத்தை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2021ம் ஆண்டின் முதல் மாதத்தில், தன் இறைவேண்டல் கருத்தை வெளியிட்டுள்ளார்.

திருத்தந்தையின் உலகளாவிய இறைவேண்டல் வலையமைப்பு என்ற பணிக்குழு, சனவரி 5, இச்செவ்வாய் மாலை வெளியிட்ட The Pope Video என்ற காணொளியில், 'மனித உடன்பிறந்த நிலையின் பணியில்' என்ற தலைப்புடன், திருத்தந்தை, தன் கருத்துக்களை, இஸ்பானிய மொழியில் பகிர்ந்துகொண்டார்.

செபமாலையை செபிக்கும் ஒரு கிறிஸ்தவப் பெண், தங்களுக்கே உரிய முறையில் செபங்களை சொல்லும் ஓர் இஸ்லாமியப்பெண், மற்றும் ஒரு யூத இளைஞர் ஆகியோரை பதிவு செய்துள்ள இந்தக் காணொளியில், இவர்கள் மூவரும், தங்கள் இறைவேண்டலை முடித்தபின், ஒன்றிணைந்து, தேவையில் இருக்கும் வறியோருக்கு உணவு தயாரித்து வழங்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்தக் காட்சிகள் தோன்றும் வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் நூலகத்திலிருந்து பகிர்ந்துகொள்ளும் எண்ணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திருத்தந்தை இஸ்பானிய மொழியில் கூறும் கருத்துக்களின் சுருக்கம் இதோ: "இயேசுவைப் பின்பற்றி, தந்தையிடம் நாம் செபிக்கும் வேளையில், நாம் சகோதரர்களாக, சகோதரிகளாக இணைந்து வருகிறோம். அதே வேளையில், ஏனைய மத மரபின்படி இறைவேண்டல் செய்வோருடனும் இணைந்துவருகிறோம். இறைவேண்டல் செய்வோர் அனைவருமே உடன்பிறந்தோர்.

மனிதமாண்பு, உடன்பிறந்த நிலை ஆகியவற்றின் ஊற்றாக இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி அமைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளும் திருஅவை, ஏனைய மதங்களில் இறைவன் செயலாற்றுகிறார் என்ற எண்ணத்தையும் மதிக்கிறது.

இறைவனை வழிபடுதலும், அயலவரை அன்பு செய்வதும் கிறிஸ்தவ நம்பிக்கையின் ஊற்றாக, அடித்தளமாக அமைந்துள்ளது.

ஏனைய மத நம்பிக்கை கொண்டோருடன் முழுமையான உறவுடன் வாழவும், ஒருவர் ஒருவருடன் சண்டையின்றி, ஒருவர் ஒருவருக்காக இறைவேண்டல் செய்யவும், அவர்களைக் குறித்து திறந்த மனம் கொண்டிருக்கவும் நாம் ஆண்டவரை வேண்டுவோம்"

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 January 2021, 15:10