இறையடியார், பிரெஞ்ச் மரபுணு நிபுணர் Jérôme Lejeune இறையடியார், பிரெஞ்ச் மரபுணு நிபுணர் Jérôme Lejeune 

பிரெஞ்ச் மரபுணு நிபுணர் Lejeuneனின் புண்ணிய வாழ்வு

இரண்டாம் உலகப் போரின்போது பணியாற்றிய, இத்தாலிய அருள்பணியாளர் Giovanni Fornasini (1915-1944) அவர்கள், தன் கிறிஸ்தவ நம்பிக்கைக்காக, நாத்சி படைவீரர் ஒருவரால், மறைசாட்சியாக கொல்லப்பட்டார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூன்று பொதுநிலையினர் உட்பட, எட்டுப் பேரை, அருளாளர் மற்றும், இறையடியார்களாக, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கென, அவர்களின் புண்ணிய வாழ்வு குறித்த விவரங்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவகர்கள் அங்கீகரித்துள்ளார்.

புனிதர் மற்றும் அருளாளர்களாக உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் மார்செல்லோ செமெராரோ (Marcello Semeraro) அவர்கள், சனவரி 21, இவ்வியாழனன்று, திருத்தந்தையைச் சந்தித்து, 7 இறையடியார்கள், மற்றும், மறைசாட்சி ஒருவரின் வாழ்வு குறித்த சிறப்பு விவரங்களை சமர்ப்பித்தார்.

Down syndrome எனப்படும், மூளை வளர்ச்சி குறைபாட்டிற்கு, அதிகப்படியான உயிரணுக்களின் வளர்ச்சியே காரணம் என்பதைக் கண்டுபிடித்த இறையடியார், பிரெஞ்ச் மரபுணு நிபுணர் Jérôme Lejeune அவர்கள், அக்குறைபாட்டினால் துன்புறும் மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கென்று, தன் வாழ்வை அர்ப்பணித்திருந்தவர்.

கருவில் வளரும் குழந்தைக்கு மூளை வளர்ச்சியின்மை குறைபாடு இருக்கின்றதா என்பதை பரிசோதனை செய்வதையும், மற்ற குறைபாடுகளுடன் கருவில் வளரும் குழந்தைகளைக் கருக்கலைப்பு செய்வதையும், Lejeune அவர்கள் கடுமையாய் எதிர்த்துவந்தவர்.

இவர், 1969ம் ஆண்டில், மரபணு பரிசோதனைகளுக்காக, William Allan என்ற மதிப்புமிக்க விருதையும் பெற்றிருப்பவர். 1994ம் ஆண்டில், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், Lejeune அவர்களை, திருப்பீட வாழ்வுக் கழகத்தின் முதல் தலைவராக நியமித்தார். ஆயினும் இந்தப் பணியை ஏற்ற 33 நாள்களுக்குப்பின், Lejeune அவர்கள், பாரிசில், தனது 67வது வயதில், இறையடி சேர்ந்தார்.

மேலும், இரண்டாம் உலகப் போரின்போது பணியாற்றிய, இத்தாலிய அருள்பணியாளர் Giovanni Fornasini (1915-1944)  அவர்கள், தன் கிறிஸ்தவ நம்பிக்கைக்காக, நாத்சி படைவீரர் ஒருவரால், மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார்.

பாடுகளின் அருள்சகோதரிகள் சபையை தோற்றுவித்தவரும், இங்கிலாந்தின் தொழிற்சாலை நகரங்களில் ஏழைத் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றியவருமான Elizabeth Prout (1820-1864), இத்தாலிய அருள்பணியாளர்கள் Michele Arcangelo Maria Antonio Vinti (1893-1943), Ruggero Maria Caputo (1907-1980), இஸ்பெயின் நாட்டில் வின்சென்ட் தெ பவுல் சபை கழகத்தை உருவாக்கியவரும், பியானோ இசைக்கலைஞருமாகிய Santiago Masarnau Fernández (1805-1882), அருள்பணித்துவ வாழ்வுக்காகப் படித்துக்கொண்டிருந்த இத்தாலியரான Pasquale Canzii (1914-1930), இத்தாலியில், Opere di Assistenza e Redenzione Sociale எனப்படும் சமுதாயநலப்பணி அமைப்பிற்கு உதவிவந்த Adele Bonolis (1909-1980) ஆகியோரின் புண்ணிய வாழ்வு குறித்த விவரங்களுக்கும் திருத்தந்தை இசைவு தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 January 2021, 15:12