Io sono Joy புதிய நூலின் அட்டைப்படம் Io sono Joy புதிய நூலின் அட்டைப்படம் 

மனச்சோர்விலிருந்து காப்பாற்றுவது, நம்பிக்கையே

மகிழ்வு பற்றி சான்று பகர்தல், மனித சமுதாயத்தின் பரம்பரைச் சொத்தாக உள்ளது என்பதை அறிவிக்க விரும்புகின்ற இந்த நூல் ஆசிரியர், நைஜீரியாவிலிருந்து வந்த இளம்பெண்ணின் மகிழ்வுக் கதையையும், அவர் இத்தாலியில் அனுபவிக்கும் இரண்டாவது பிறப்பு பற்றியும் விவரிக்கின்றார் -, திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

"நானே மகிழ்வு (Io sono Joy)" எனப்படும் புதிய நூல் ஒன்றிற்கு அணிந்துரை எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனச்சோர்விலிருந்து காப்பாற்றுவது, நம்பிக்கையே என்று கூறியுள்ளார்.

நம்பிக்கையோடு இத்தாலிக்கு மேற்கொண்ட பயணத்தில் கடுந்துன்பங்களை எதிர்கொண்ட நைஜீரியா நாட்டு இளம்பெண்ணின் உருக்கமான பகிர்வை நினைவுகூர்ந்த திருத்தந்தை, அப்பெண்ணின் இறைநம்பிக்கையே அவரைக் காப்பாற்றியது மற்றும், இத்தாலியின் Caserta குழுமத்தில் அவரை ஏற்கவைத்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

மகிழ்வு பற்றி சான்று பகர்தல், மனித சமுதாயத்தின் பரம்பரைச் சொத்தாக உள்ளது என்பதை அறிவிக்க விரும்புகின்ற இந்த நூல் ஆசிரியர், நைஜீரியாவிலிருந்து வந்த இளம்பெண்ணின் மகிழ்வுக் கதையையும், அவர் இத்தாலியில் அனுபவிக்கும் இரண்டாவது பிறப்பு பற்றியும் விவரிக்கின்றார் என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

பாலைநிலத்தைக் கடத்தல், லிபியாவில் தடுப்புக்காவல் முகாம்களில் தங்கியிருத்தல், படகுச்சேதம், மனித வர்த்தகர்களால் எதிர்கொள்ளும் துன்பங்கள் போன்று, புலம்பெயர்ந்தோர், தங்களின் பயணங்களில், ஒவ்வொரு நாளும் எதிர்கொள்கின்ற அநீதிகளில் பெருமளவை, இந்த இளம்பெண் அனுபவித்திருக்கின்றார் என்றும், திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

மொத்தத்தில் இந்தப் பெண்ணின் பயணத்தை, சிலுவைப்பாதை என்று விவரித்துள்ள திருத்தந்தை, இந்தப் பெண் தன் கதையை விவரித்துள்ள ஒவ்வொரு நிகழ்விலும், கடவுள் அவர் அருகில் இருந்தார் என்பதையே உணரமுடிகின்றது என்று கூறியுள்ளார்.

மகிழ்வின் கதை

மகிழ்வின் கதை, பலரை ஒன்றிணைக்கிறது என்றும், உலகமயமாக்கப்பட்டுள்ள நம் சமுதாயங்களில், இத்தகைய மனிதமற்ற துன்பக் கதை என்றுமே பிரசன்னமாக இருக்கிறது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அணிந்துரையில் எழுதியுள்ளார்.

இளம்பெண்ணிடம் அஞ்சாதே

இந்த அணிந்துரையின் இறுதியில், அந்த இளம்பெண்ணிடம் நேரிடையாகப் பேசுவதுபோன்று எழுதியுள்ள திருத்தந்தை, உனது பெயர் மகிழ்ச்சி. நீ, உனது அன்னையின் உதரத்திலிருந்தே மகிழ்வாக இருக்கிறாய், இந்த அழகான பெயரை உன் அன்னையிடமிருந்து நீ பெற்றுள்ளாய், அப்பெயர், கடவுளின் சிறப்புப் பெயர்களில் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.

நீயே மகிழ்ச்சி, இன்று நாம் கூறும் பல பெண்களின் கதையை ஒத்தது, உனது கதை, உனது பகிர்வால், மனித வர்த்தகத்தால் துன்புறும் பலர் பற்றி கூடுதலாக அறியமுடிகிறது என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்பு மட்டுமே, அமைதி, உரையாடல், ஏற்பு, ஒருவர் ஒருவரை மதித்தல் ஆகியவற்றுக்கு, நம் பூமிக்கோளத்தில் உறுதியளிக்கின்றது என்றும், துணிவுடன் இரு, அஞ்சாதே, தொடர்ந்து முன்னேறிச்செல் என்றும், தன் அணிந்துரையை நிறைவுசெய்துள்ளார்.

Mariapia Bonanate அவர்கள், இத்தாலிய மொழியில் எழுதிய "நானே மகிழ்வு (Io sono Joy)" எனப்படும் நூல், சனவரி 27, வருகிற புதனன்று விற்பனைக்கு வருகிறது.

இன்றைய மனித வர்த்தகம்

உலக தொழில் நிறுவனத்தின் (ILO) கணிப்புப்படி, நவீன அடிமைமுறையில் 4 கோடியே 30 இலட்சம் பேர் சிக்கியுள்ளனர். இவர்களில் 2 கோடியே 49 இலட்சம் பேர் தொழில் மற்றும், 1 கோடியே 54 இலட்சம் பேர் கட்டாயத் திருமணத்திற்குப் பலியாகியுள்ளனர். 

அதாவது, இன்றைய உலகில், ஆயிரம் பேருக்கு 5.4 பேர் வீதம், நவீன அடிமைமுறைக்குப் பலியாகியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 January 2021, 15:23