கோவிட்-19 பெருந்தொற்று சமுதாய ஊரடங்கில் உரோம் புனித மர்செல்லோ ஆலயத்தில் திருத்தந்தை கோவிட்-19 பெருந்தொற்று சமுதாய ஊரடங்கில் உரோம் புனித மர்செல்லோ ஆலயத்தில் திருத்தந்தை 

2020ம் ஆண்டில், செபத்தால் மக்களுடன் ஒன்றித்த திருத்தந்தை

கொள்ளைநோயைத் தொடர்ந்துவரும் காலத்தில், அரசுகள் மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகளையும், குறிப்பாக, வறியோருக்கும் வலுவிழந்தோருக்கும் வழங்கப்பட வேண்டிய உதவிகளையும் குறித்து விண்ணப்பங்களை எழுப்பி வரும் திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கிய நெருக்கடியால், 2020ம் ஆண்டின் பெருமளவு நாள்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களைச் சந்திக்கும் நிகழ்வுகளையும், தன் திருத்தூதுப் பயணங்களையும் மேற்கொள்ளவில்லையெனினும், மக்களுக்கு தன் அருகாமையை உணர்த்த பல வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டார்.

2020ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி, தவக்காலத்தின் 2ம் ஞாயிறன்று, முதன் முறையாக தன் ஞாயிறு மூவேளை செப உரையை நூலகத்திலிருந்து நேரடி ஒளிபரப்பின் வழியே வழங்கிய வேளையில், "ஒரு கூண்டுக்குள் அடைபட்டதைப் போன்ற ஒரு சூழலில் இந்த மூவேளை செப உரையை வழங்குகிறேன்" என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த உரைக்குப்பின்னர், தான் வழக்கமாகத் தோன்றும் சன்னலிலிருந்து, ஏறத்தாழ காலியாக இருந்த புனித பேதுரு வளாகத்தை நோக்கி ஆசீரை வழங்கினார்.

அதே வண்ணம், மார்ச் 27ம் தேதி, வெள்ளிக்கிழமையன்று மாலை, மக்கள் யாருமின்றி இருந்த பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிகழ்த்திய சிறப்பு 'ஊர்பி எத் ஓர்பி" வழிபாடும், ஆசீரும், பல்வேறு ஊடகங்கள் வழியே, உலகெங்கும் வாழும் மக்களைச் சென்றடைந்தது.

மே மாதம் 6ம் தேதி முதல், அக்டோபர் 7ம் தேதி முடிய, வத்திக்கான் நூலக அறையிலிருந்து தன் புதன் மறைக்கல்வி உரைகளை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'உலகை குணமாக்கும்' என்ற தலைப்பில், புதிய ஒரு தொடரை ஆகஸ்ட் 12ம் தேதி முதல் வழங்கினார்.

கோவில்கள் அனைத்திலும் வழிபாட்டில் மக்கள் பங்கேற்கக் கூடாது என்று இத்தாலிய அரசு, மார்ச் 9ம் தேதி தடைவிதித்ததையடுத்து, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் தான் ஒவ்வொரு நாளும், உரோம் நேரம் காலை ஏழுமணிக்கு நிறைவேற்றும் திருப்பலியை, நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இசைவு தெரிவித்தார்.

மே மாதம் 18ம் தேதி, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களின் 100வது பிறந்தநாளையொட்டி, அவரது கல்லறை அமைந்துள்ள  புனித பேதுரு பெருங்கோவில் பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றிய திருப்பலியுடன், இந்த நேரடி ஒளிபரப்புக்கள் நிறைவுக்கு வந்தன.

வத்திக்கான் புனித பேதுரு வளாகம், வத்திக்கானிலுள்ள புனித தமாசோ (San Damaso) வளாகம், மற்றும் திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கம் ஆகிய இடங்களில் மக்களை நேரடியாக சந்தித்தும், வத்திக்கான் நூலக அறையிலிருந்து நேரடி ஒளிபரப்பின் வழியாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2020ம் ஆண்டில் வழங்கிய புதன் மறைக்கல்வி உரைகள் 46 என்பது குறிப்பிடத்தக்கன.

அத்துடன், ஞாயிறன்றும், இன்னும் சில சிறப்பான திருநாள்களிலும், புனித பேதுரு வளாகத்தின் மேல் மாடி சன்னலின் வழியாகவும், நூலக அறையிலிருந்தும் திருத்தந்தை வழங்கிய நண்பகல் மூவேளை செப உரைகள் மற்றும் அல்லேலூயா வாழ்த்தொலி உரைகள் 58 என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த உரைகள் அனைத்திலும், வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த கொள்ளைநோயைத் தொடர்ந்துவரும் காலத்தில், மனித சமுதாயமும், அரசுகளும் மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகளையும், குறிப்பாக, வறியோருக்கும், வலுவிழந்தோருக்கும் வழங்கப்படவேண்டிய உதவிகளையும் குறித்து விண்ணப்பங்களை எழுப்பிவந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 December 2020, 14:37