மறைக்கல்வியுரையின்போது - 231220 மறைக்கல்வியுரையின்போது - 231220 

மறைக்கல்வியுரை - பெத்லகேமை நோக்கி ஓர் ஆன்மீகப் பயணம்

திருத்தந்தை : உலக அளவில் நல நெருக்கடியை சந்தித்துவரும் காலத்தில் இடம்பெறும் இந்த ஆண்டின் கிறிஸ்மஸ், இயேசு பாலன் வழங்கும் நம்பிக்கையை அணைத்துக்கொள்ள உதவுவதாக.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

இறைவேண்டல் குறித்து ஒரு மறைக்கல்வித் தொடரை கடந்த பல வாரங்களாக தன் புதன் மறைக்கல்வி உரைகளில் வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 23, இப்புதனன்று, அதாவது, கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், கிறிஸ்து பிறப்பு குறித்தே தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார். முதலில் புனித லூக்கா நற்செய்தியின் இரண்டாம் பிரிவிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட்டது. அதன்பின் திருத்தந்தையின் சிந்தனைப் பகிர்வு இடம்பெற்றது.

அக்காலத்தில், […] தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே, பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார். (லூக் 2, 4-7)

மறைக்கல்வியுரை

அன்பு சகோதரரே, சகோதரிகளே, கிறிஸ்து பிறப்பு பெருவிழா நெருங்கிவரும் இவ்வேளையில், இடையர்களுக்கு வானதூதர்கள் வழங்கிய மகிழ்வின் செய்தியை மீண்டும் ஒருமுறை செவிமடுக்க நம்மைத் தயாரிக்கிறோம். “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று, ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார் (லூக்.2:10,11) என்பதே அச்செய்தி. இடையர்களைப் போலவே, நாமும் பெத்லகேமை நோக்கி ஓர் ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள அழைப்புப் பெற்றுள்ளோம். உலகில் முடிவின்றி வீசிக்கொண்டிருக்கும், இயேசு எனும் இறை ஒளியை பெத்லகேமில் நாம், தேடிக் கண்டுகொள்ளலாம். வார்த்தை மனுவுருவாகி நம்மிடையே குடிகொண்டார் என்ற நம் நம்பிக்கையின் சாரத்தை கண்டுகொள்ள, நம் கண்களை மறைத்திருக்கும் உலகாயுத மனநிலைகளை வெற்றிகொள்ள வேண்டும் என கிறிஸ்மஸ் நமக்கு அழைப்புவிடுக்கின்றது. கடவுளின் முடிவற்ற திட்டம், நம் வரலாற்றின் இடையே உள்புகுந்து, நல்லதொரு வருங்காலத்திற்குரிய வழியைத் திறக்கின்றது. உலக அளவில் நல நெருக்கடியை சந்தித்து வரும் காலத்தில் இடம்பெறும் இந்த ஆண்டின் கிறிஸ்மஸ், புதிதாகப் பிறந்துள்ள இயேசு வழங்கும்  நம்பிக்கையை  அணைத்துக்கொள்ளவும், வருங்காலத்தை நோக்கவும் நமக்கு உதவுவதாக. கிறிஸ்து பிறப்பு குடில் முன்னர் நாம் தியானித்து, செபிக்கும்வேளையில், நம் மீட்பிற்காக மனுவுரு எடுத்த இறைவனின் நெருக்கத்தையும், கரிசனையுடன்கூடிய அன்பையும் குறித்த விழிப்புணர்வை மேலும் பெறுவோமாக. இந்த கிறிஸ்மஸின்போது, இயேசு பாலன் நம்மில் புதிதாகப் பிறக்கட்டும். அவ்வாறு பிறக்கும் இயேசு பாலன் தரும் மகிழ்வையும் புதிய நம்பிக்கையையும் அனைவருக்கும் வழங்குவோமாக.

இவ்வாறு, கிறிஸ்து பிறப்பு பெருவிழா குறித்து மறைக்கல்வியுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  நமக்காக தம் அன்பையும், அருளையும், அமைதியையும், ஒளியையும் வழங்கக் காத்திருக்கும் இறைவனை நோக்கி நாமும் இடையர்கள்போல் செல்வோமாக, என அழைப்பு விடுத்தார். அனைத்து மனிதர்களுக்கும், குடும்பங்களுக்கும், இறைவனின் அமைதியையும் மகிழ்வையும் இறைஞ்சி, கிறிஸ்மஸ் வாழ்த்துக்களையும் தெரிவித்து, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 December 2020, 12:06