இஸ்பெயின் நாட்டு ஆழ்நிலை தியான அருள்சகோதரிகள்  இஸ்பெயின் நாட்டு ஆழ்நிலை தியான அருள்சகோதரிகள்  

ஆழ்நிலை தியான துறவியருக்காக செபிப்போம்

1953ம் ஆண்டில், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், Pro Orantibus அதாவது ‘இறைவேண்டல் எழுப்பிக்கொண்டிருப்பவர்கள்’ என்ற தலைப்பில், ஆழ்நிலை தியான துறவியர் உலக நாளை உருவாக்கினார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

புனித கன்னி மரியா காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட திருநாளாகிய நவம்பர் 21, இச்சனிக்கிழமையன்று, ஆழ்நிலை தியான வாழ்வை மேற்கொண்டுள்ள துறவியரின் உலக நாள் சிறப்பிக்கப்பட்டதை முன்னிட்டு, அந்த துறவியருக்காக இறைவேண்டல் செய்யுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தி வழியாக அழைப்பு விடுத்துள்ளார்.

“இன்று மரியா, ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட நிகழ்வை நினைவுகூர்கின்றோம், மற்றும், ஆழ்நிலை தியான துறவியரின் உலக நாளையும் சிறப்பிக்கின்றோம். ஆழ்நிலை தியான துறவுசபைகளைச் சார்ந்த அருள்சகோதரிகளே,  அருள்சகோதரர்களே, உங்களுக்கு நன்றி. ஏனெனில், நீங்கள், பலவீனர்களுக்கு ஆதரவாக, துறைமுகத்தை அடையாளம் காட்டும் கலங்கரை விளக்கமாக, இருளான இரவை ஒளிர்விக்கும் தீப்பந்தமாக, புதிய விடியலை அறிவிக்கும் காவலர்களாக இருக்கின்றீர்கள்”  என்ற சொற்கள், ஆழ்நிலை தியான துறவியர் உலக நாள் (#ProOrantibus Day) என்ற ஹாஷ்டாக்குடன், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில், இச்சனிக்கிழமையன்று பதிவாகியிருந்தன.

1953ம் ஆண்டில், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், Pro Orantibus அதாவது ‘இறைவேண்டல் எழுப்பிக்கொண்டிருப்பவர்கள்’ என்ற தலைப்பில், ஆழ்நிலை தியான துறவியர் உலக நாளை உருவாக்கியதிலிருந்து, கத்தோலிக்கர், அவர்களுக்காக, கடவுளுக்கு நன்றிசொல்ல ஊக்கப்படுத்தப்படுகின்றனர். மேலும், நான்கு சுவர்களுக்குள்ளே எப்போதும் மறைந்த வாழ்வு வாழ்கின்ற இருபால் துறவியருக்கு, ஆன்மீக மற்றும், பொருளாதார அளவில் ஆதரவு அளிக்குமாறும், கத்தோலிக்கர் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இந்த துறவியரின் முக்கிய பணி இறைவேண்டல் செய்வதாகும்.

உலக இளையோர் நாள் சிலுவை

மேலும், நவம்பர் 22, வருகிற ஞாயிறு சிறப்பிக்கப்படும் கிறிஸ்து அரசர் திருநாளன்று, புனித பேதுரு பெருங்கோவிலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் திருப்பலியின் இறுதியில், உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் அடையாளமாக விளங்கும் சிலுவையையும், 'உரோம் மக்களின் பாதுகாவலர்' என்று பொருள்படும், Salus Populi Romani என்ற பெயர் கொண்ட அன்னை மரியாவின் திரு உருவத்தையும், பானமா நாட்டு இளையோர், போர்த்துக்கல் நாட்டு இளையோரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளைநோய் தடைவிதிகள் காரணமாக, பானமா, மற்றும் போர்த்துக்கல் நாடுகளிலிருந்து வெகு குறைவான எண்ணிக்கையில் வருகை தரும் இளையோரின் பங்கேற்புடன் திருத்தந்தை சிறப்பிக்கும் இத்திருப்பலி, வத்திக்கான் ஊடகங்கள் வழியே நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 November 2020, 14:39