செயற்கை நுண்ணறிவில் ஏற்படும் வளர்ச்சி, மனிதருக்கு...

மனித இயந்திரங்கள் மற்றும், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் ஏற்படும் வளர்ச்சி, எப்போதும் மானுடத்திற்குத் தொண்டாற்றவேண்டும் என்று, இந்த நவம்பர் மாதத்தில் நாம் அனைவரும் கடவுளை மன்றாடுவோம் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ரோபோக்கள் எனப்படும் மனித இயந்திரங்கள் மற்றும், செயற்கை நுண்ணறிவில் (AI) ஏற்படும் வளர்ச்சி, மனிதர் மற்றும், படைப்பை மதிப்பதில் அக்கறை காட்டுவதாய் அமையவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  காணொளிச்செய்தி ஒன்றின் வழியாக வலியுறுத்தியுள்ளார்.

நவம்பர் 05, இவ்வியாழன் மாலையில், இம்மாதச் செபக்கருத்து பற்றிய தன் சிந்தனைகளைக் காணொளிச் செய்தியில் வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித சமுதாயம் அனுபவித்துவரும் மிகப்பெரும் மாற்றம் குறித்து நம் கவனத்தைத் திருப்பியுள்ள அதேவேளை, செயற்கை நுண்ணறிவில் ஏற்படும் வளர்ச்சிகளுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

உண்மையான வளர்ச்சி

மனித இயந்திரங்கள் மற்றும், செயற்கை நுண்ணறிவில் ஏற்படும் வளர்ச்சி, பொது நலனுக்குப் பயன்படுத்தப்பட்டால், அது சிறந்ததோர் உலகை அமைக்க உதவும் என்று கூறியுள்ள திருத்தந்தை, தொழில்நுட்பத்தில் ஏற்படும் வளர்ச்சி, சமுதாயத்தில் சமத்துவமின்மையை அதிகரிக்காது என்ற தன் நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளார்.

இந்த வளர்ச்சி சமத்துவமின்மையை அதிகரித்தால், அது உண்மையான வளர்ச்சியாக இருக்காது என்றும், இத்தகைய வளர்ச்சி, மனிதரின் மாண்பு மற்றும், படைப்பைப் பாதுகாப்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளாது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

நன்மைகள்

செயற்கை நுண்ணறிவு, மனித சமுதாயம் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளை அகற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது, இது, மாணவர்களின் கற்கும் திறனை மதிப்பீடு செய்ய உதவலாம், சிறந்த தொடர்பு சாதனங்களை உருவாக்குவதன் வழியாக, பார்வை மற்றும், செவித்திறன் குறைபாடுள்ள மக்களுக்கு உதவலாம் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

மனித இயந்திரங்கள் மற்றும், செயற்கை நுண்ணறிவில் ஏற்படும் வளர்ச்சியால் கிடைக்கும் நன்மைகள், நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படவும், மற்றும், வேலைவாய்ப்புக்களை உருவாக்கவும் உழைப்பது நமது கடமை என்பதையும், நவம்பர் மாதச் செபக்கருத்து பற்றிய தனது விளக்கத்தில் திருத்தந்தை கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு மாதமும் தனது செபக்கருத்தை காணொளி வழியாக வெளியிட்டுவருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்.

இக்காலக்கட்டத்தில், உலக அளவில் 37 விழுக்காட்டு நிறுவனங்கள், ஏதாவது ஒரு வகையில், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 November 2020, 15:28