திருத்தந்தையுடன் பேராயர் சில்வானோ தொமாசி திருத்தந்தையுடன் பேராயர் சில்வானோ தொமாசி 

Order of Malta அமைப்பிற்கு திருத்தந்தையின் சிறப்பு பிரதிநிதி

80 வயது நிரம்பிய பேராயர் தொமாசி அவர்கள், திருப்பீடத்தின் தூதரகப் பணிகளிலும், ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும், ஏனைய பன்னாட்டு நிறுவனங்களில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகவும் பணியாற்றியிருப்பவர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

Order of Malta எனப்படும், மால்ட்டா கத்தோலிக்க பிறரன்பு அமைப்பிற்கு, தனது சிறப்பு பிரதிநிதியாக, அண்மையில் புதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள, பேராயர் சில்வானோ தொமாசி அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 01, இஞ்ஞாயிறன்று நியமித்துள்ளார்.

திருத்தந்தையின் இந்த நியமனத்தின்படி, பேராயர் தொமாசி அவர்கள், மால்ட்டா பிறரன்பு அமைப்பின் அரசியலமைப்பு, விதிமுறைகள் உட்பட, அதன் நிர்வாகத்தில் இடம்பெற்றுவரும் சீர்திருத்த நடவடிக்கைகளில் இடைநிலையாளராகச் செயல்படும் பொறுப்பை ஏற்கிறார்.

இம்மாதம் 28ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் திருவழிபாட்டில், கர்தினாலாக உயர்த்தப்படும் பேராயர் தொமாசி அவர்கள், இம்மாதத்தில் தேர்ந்தெடுக்கப்படும் மால்ட்டா அமைப்பின் புதிய தலைவர் எடுக்கும் பதவிபிரமாணத்தையும் ஏற்பார்.

80 வயது நிரம்பிய பேராயர் தொமாசி அவர்கள், Scalabrini துறவு சபையைச் சார்ந்தவர். திருப்பீடத்தின் தூதரகப் பணிகளில் பணியாற்றியுள்ள இவர், ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும், ஏனைய பன்னாட்டு நிறுவனங்களில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகவும் பணியாற்றியிருப்பவர். இவர், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையோடும் ஒத்துழைப்பாளராகச் செயல்பட்டு வருகிறார்.

Rhodes மற்றும், Malta, எருசலேம் புனித யோவானின் Sovereign Military Hospitaller அமைப்பின் (S.M.O.M.) மிகப்பெரும் நன்மைக்காக, அந்த அமைப்பிற்கு, எனது சிறப்பு பிரதிநிதியாக, தங்களை நியமிக்கிறேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 01, இஞ்ஞாயிறன்று, பேராயர் தொமாசி அவர்களுக்கு எழுதிய மடல் கூறுகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 November 2020, 16:06