Passionists துறவு சபையினரைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் (2018) Passionists துறவு சபையினரைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் (2018)  

Passionists துறவு சபையினருக்கு திருத்தந்தை வாழ்த்து

கிறிஸ்துவின் பாடுகள் வழியே வெளிப்படும் இறையன்பினால் இவ்வுலகம் முழுவதும் பற்றியெரிவதை, புனித சிலுவையின் பவுல் அவர்கள், தன் பணியின் நோக்கமாகக் கொண்டிருந்தார் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்துவின் பாடுகளையும், பாஸ்கா மறையுண்மையையும் தங்கள் துறவற வாழ்வின் மையமாகக் கொண்டு பணியாற்றும் Passionists துறவு சபையினர் கொண்டாடும் 300ம் ஆண்டு நிறைவில், தானும் ஆன்மீக வழியில் ஒருங்கிணைவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்துறவு சபையினருக்கு அனுப்பிய வாழ்த்துச்செய்தியில் கூறியுள்ளார்.

புனித சிலுவையின் பவுல் அவர்கள், 1720ம் ஆண்டு, Passionists துறவு சபையினை உருவாக்கியதன் மூன்றாம் நூற்றாண்டினை, இவ்வாண்டு நவம்பர் 22ம் தேதி முதல், 2021ம் ஆண்டு சனவரி 1ம் தேதி முடிய கொண்டாடும் வேளையில், இத்துறவு சபையின் உலகத்தலைவர், அருள்பணி Joachim Regoஅவர்களுக்கு, திருத்தந்தை இச்செய்தியை அனுப்பியுள்ளார்.

இத்துறவு சபையினர் அண்மையில் மேற்கொண்ட உயர்மட்ட கூட்டத்தில், நன்றி, இறைவாக்குரைத்தல், நம்பிக்கை என்ற மூன்று கருத்துக்களில் தங்கள் பகிர்வுகளை மேற்கொண்டதைக் குறித்து, திருத்தந்தை தன் மகிழ்வை வெளியிட்டுள்ளார்.

அன்னை மரியாவின் புகழ்ப்பாடலில் ஒலித்த நன்றியுணர்வையும், ஆவியானவரின் தூண்டுதலால் நிகழும் இறைவாக்குரைத்தலையும், பழையன குறித்து குறைகூறாமல், வருங்காலத்தை குறித்த நம்பிக்கையையும் இத்துறவு சபையினர் பெற்றிருக்க வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியின் வழியே விண்ணப்பித்துள்ளார்.

கிறிஸ்துவின் பாடுகள் வழியே வெளிப்படும் இறையன்பினால் இவ்வுலகம் முழுவதும் பற்றியெரிவதை, புனித சிலுவையின் பவுல் அவர்கள், தன் பணியின் நோக்கமாகக் கொண்டிருந்தார் என்பதை, திருத்தந்தை சிறப்பாகக் குறிப்பிட்டார்.

துன்புறும் மனித சமுதாயத்தின் தேவைகளை நிறைவேற்ற Passionists துறவு சபையினர் பெற்றிருக்கும் சிறப்பான அழைப்பை நிறைவேற்றுவதில் அவர்கள் மனம் தளராமல் செயலாற்ற வேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

புனித சிலுவையின் பவுல் அவர்கள், தன் உலக வாழ்வைத் துறந்து, Castellazzo எனுமிடத்தில் உள்ள புனித கார்லோ ஆலயத்தின் அறை ஒன்றில் தன் 40 நாள் கடுந்தவ முயற்சிகளை துவங்கிய நவம்பர் 22ம் தேதியன்று, இத்துறவு சபையினர் தங்கள் மூன்றாம் நூற்றாண்டு கொண்டாட்டங்களைத் துவக்குகின்றனர் என்றும், இந்தக் கொண்டாட்டங்களின் துவக்கத் திருப்பலியை, உரோம் நகரில் உள்ள புனித யோவான் மற்றும் பவுல் பசிலிக்காவில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்  அவர்கள் நிறைவேற்றுவார் என்றும், இத்துறவு சபையின் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 November 2020, 14:45