அமெரிக்க ஐக்கிய நாட்டின் பெருந்தீ அமெரிக்க ஐக்கிய நாட்டின் பெருந்தீ 

படைப்பை பாதுகாக்கவேண்டிய தேவை குறித்த விழிப்புணர்வு

அமெரிக்க பெருந்தீ குறித்தும், அர்மேனியா-அஜர்பைஜான் போர் நிறுத்தம் குறித்தும் திருத்தந்தையின் பகிர்வு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் மேற்கு கடற்கரைப்பகுதியிலும், தென் அமெரிக்காவின் மத்தியப் பகுதியிலும் பெருந்தீயால் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாதிக்கப்பட்டோர், மற்றும், தீயணைப்புப் படையினர் நோக்கி தன் எண்ணங்கள் செல்வதாகக் குறிப்பிட்டார்.

இந்த பேரிடர்களால் துன்புறும் மக்களுக்கு இறைவன், அவற்றைத் தாங்கும் மனவுறுதியை வழங்குவாராக என, தன் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில் செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், படைப்பை பாதுகாக்கவேண்டியதன் தேவை குறித்த விழிப்புணர்வை நாம் பெற இறைவன் உதவுவாராக எனவும் வேண்டினார்.

அர்மேனியா-அஜர்பைஜான் போர் நிறுத்தம்

மேலும், இரஷ்யாவின் தலையீட்டின்பேரில் அர்மேனியாவுக்கும் அஜர்பைஜானுக்கும் இடையே மனிதாபிமான போர் நிறுத்தம் இச்சனிக்கிழமை நண்பகல் முதல் அமலுக்கு வந்துள்ளது குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது ஓர் உறுதியற்ற போர் நிறுத்தமே எனினும், மக்களின் துன்பநிலைகளை மனதில் கொண்டு, நீடித்த ஒரு போர் நிறுத்தமாக மாறும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.

உயிரிழப்புகள், வீடுகள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் அழிவு, போன்றவை பற்றியும் குறிப்பிட்டு கவலையை வெளியிட்ட திருத்தந்தை, பாதிக்கப்பட்டோர், மற்றும், உயிர் ஆபத்திலிருப்போர் அனைவருக்காகவும் செபிக்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 October 2020, 13:07