திருத்தந்தை பிரான்சிஸ், சுவிஸ் கார்ட்ஸ் திருத்தந்தை பிரான்சிஸ், சுவிஸ் கார்ட்ஸ் 

சுவிஸ் கார்ட்ஸ் படைவீரர்களுக்கு திருத்தந்தை நன்றி

கடந்த காலத்தில், குறிப்பாக, உரோம் நகர் சூறையாடப்பட்டபோது, சுவிஸ் படைவீரர்கள், தங்கள் உயிரையே கையளிக்கும் அளவுக்கு, துணிவுடன் திருத்தந்தையைக் காப்பாற்றியதை நினைவுகூர்கிறேன் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்களாகப் பணியாற்றும் ‘சுவிஸ் கார்ட்ஸ்’ என்ற அமைப்பில், புதிதாக இணைந்திருக்கும் 38 இளையோர், அவர்களின் குடும்பத்தினர் மற்றும், பாப்பிறை சுவிஸ் கார்ட்ஸ் அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோரை, அக்டோபர் 02, இவ்வெள்ளியன்று, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து தன் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சுவிட்சர்லாந்து நாட்டு கத்தோலிக்கச் சமுதாயத்தைச் சேர்ந்த இந்த இளையோரின் குடும்பத்தினர், திருப்பீடத்தின்மீது கொண்டிருக்கும் பக்தியை வெளிப்படுத்துவதோடு, தங்கள் பிள்ளைகளை கிறிஸ்தவ நம்பிக்கையிலும், அறநெறிப் பண்புகளிலும், அயலவருக்குத் தாராள மனதுடன் பணியாற்றும் உணர்விலும் வளர்த்தெடுத்துள்ளனர் என்று, அக்குடும்பத்தினருக்கு தன் நன்றியைத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த காலத்தில், குறிப்பாக, உரோம் நகர் சூறையாடப்பட்டபோது, சுவிஸ் படைவீரர்கள், தங்கள் உயிரையே கையளிக்கும் அளவுக்கு, துணிவுடன், திருத்தந்தையைத் காப்பாற்றிய வீரச்செயலை நினைவுகூர்வதற்கு இந்த சந்திப்பு நல்லதொரு வாய்ப்பை வழங்கியுள்ளது என்று திருத்தந்தை தன் உரையில் குறிப்பிட்டார்.

ஆன்மீகம் எவ்வகையில் சூறையாடப்படும் என்பதை, இந்நிகழ்வு இளையோருக்கு நினைவுறுத்துகிறது என்பதை ஓர் எச்சரிக்கையாகக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய இளையோர் பலர், இவ்வுலக செல்வங்கள் தங்கள் ஆன்மாவைச் சூறையாட விட்டுவிடும் ஆபத்தில் உள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

புதிய சுவிஸ் காவல் வீரர்கள், உரோம் நகரில் தங்கிப் பணியாற்றும் காலக்கட்டம், அந்நகரின் வளமையான வரலாறு, கலாச்சாரம், மற்றும், கிறிஸ்தவ நம்பிக்கை ஆகியவற்றை உள்வாங்குவதற்கும், அவர்களின்  வாழ்வைத் தனித்துவமிக்கதாய் மாற்றுவதற்கும் ஏற்றகாலமாக அமைவதாக என்று வாழ்த்திய திருத்தந்தை, கிறிஸ்தவத்தை பொருள்செறிந்த வகையில் வாழுமாறும், ஒருவர் ஒருவருக்கு உதவிசெய்து, உடன்பிறந்த உணர்விலும், மகிழ்விலும் வாழுமாறும் கூறினார்.

இந்தப் புதியவர்கள், அக்டோபர் 4, வருகிற ஞாயிறன்று எடுக்கும் பணிப்பிரமாணம், அவர்களின் திருமுழுக்கு அழைப்பிற்கு விசுவாசமாக இருப்பதை அறிவிப்பதாக அமைந்துள்ளது என்றும், தூய ஆவியாரின் வல்லமையால், அவர்கள்  எதிர்கொள்ளும் இடர்களை, பரபரப்பின்றி சந்திப்பார்கள் என்றும், நம் ஆண்டவர் எப்போதும் அவர்கள் அருகில் இருக்கிறார் என்பதை மறக்கவேண்டாம் என்றும், திருத்தந்தை அவர்களைக் கேட்டுக்கொண்டார்.  

இவ்வேளையில் திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்களாக, சுவிஸ் காவல் வீரர்கள் ஆற்றும் அளப்பரிய பணிகளுக்கு மட்டுமல்லாமல், அவர்கள் அப்பணியை ஆற்றிவரும் முறைக்கும் நன்றிகூறுவதாகத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலக வாழ்வின்போது நாம் எவ்வளவு ஆற்றினோம் என்பதை வைத்து அல்ல, மாறாக, அவற்றை எவ்வாறு, எவ்வளவு அன்புடன் ஆற்றினோம் என்பதை வைத்தே, நம் வாழ்வின் இறுதியில் தீர்ப்பிடப்படுவோம் என்று, கல்கத்தா புனித அன்னை தெரேசா கூறியதையும் நினைவுபடுத்தி, தன் உரையை நிறைவுசெய்தார்.

புதிய சுவிஸ் கார்ட்ஸ்

1527ம் ஆண்டில் உரோம் நகர் சூறையாடப்பட்டபோது, திருத்தந்தை 7ம் கிளமெண்ட் அவர்கள், பாப்பிறை மாளிகையைவிட்டுத் தப்பித்துச் செல்வதற்காகப் போராடிய 189 சுவிட்சர்லாந்து படைவீரர்களில் 147 பேர் உயிரிழந்தனர். இந்தப் படைவீரர்கள் உயிரிழந்த மே 6ம் நாளன்று, ஒவ்வோர் ஆண்டும், வத்திக்கானில், புதிய சுவிஸ் காவல் வீரர்கள் உறுதிமொழி எடுத்து, பணியில் சேருவது வழக்கம்.

இவ்வாண்டு இந்நிகழ்வு, கோவிட்-19 தொற்றுக்கிருமி நெருக்கடியால், இத்தாலியின் பாதுகாவலராகக் கருதப்படும், அசிசி நகர் புனித பிரான்சிஸ் திருநாளாகிய அக்டோபர் 4, இஞ்ஞாயிறன்று நடைபெறுகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 October 2020, 13:30