ஜப்பானில் திருத்தந்தை பிரான்சிஸ் ஜப்பானில் திருத்தந்தை பிரான்சிஸ் 

பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களற்ற உலகு அமைய...

“தங்களின் அடிப்படை உரிமைகள் மற்றும், மாண்பு, குறிப்பாக, வாழ்வு மற்றும், பள்ளிக்குச் செல்லும் உரிமை மறுக்கப்படுகின்ற சிறார் மீது, சிறப்பான கவனம் செலுத்தப்படவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 26, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட, அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிக்கும் உலகநாளையொட்டி, பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களற்ற உலகிற்காக ஆண்டவரிடம் மன்றாடுவோம் என்ற கருத்தை வலியுறுத்தி, ஐந்து டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“மனிதர், இடங்கள், சொத்துக்கள், இடங்களின் தன்மை போன்ற எல்லாவற்றையும் முற்றிலும் அழிக்கும் சக்திபெற்ற ஆயுதங்கள் இல்லாத ஓர் உலகம் அமைவதற்காகவும், அமைதி எனும் கொடைக்காகவும் ஆண்டவரிடம் மன்றாடுவோம், மனித இனத்திற்கு கடும் அச்சுறுத்தலாக உள்ள, அணு ஆயுதங்களிலிருந்து மனித சமுதாயம் விடுவிக்கப்பட, நம்மையே அர்ப்பணிப்போம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

“ஒருவர் ஒருவரின்றி நாம் வாழ இயலாது என்பதை, கோவிட்-19 கொள்ளைநோய் நமக்கு காட்டியுள்ளது, நாடுகளை ஒன்றுசேர்க்கவும், மக்களுக்கிடையே பாலங்களை அமைக்கவும் ஐக்கிய நாடுகள் நிறுவனம் உருவாக்கப்பட்டது, நாம் அனைவரும் விரும்பும் வருங்காலத்தை, ஒன்றுசேர்ந்து கட்டியெழுப்ப, இந்த நிறுவனத்தை நல்ல முறையில் பயன்படுத்துவோம்” என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

திருத்தந்தையின் மூன்றாவது டுவிட்டர் செய்தியில், “இக்காலக்கட்டத்தின் மிகப்பெரும் தேவையாகிய, மிக வறிய நாடுகளின் கடன்கள் குறைக்கப்பட அல்லது, மன்னிக்கப்பட, அனைத்து நாடுகளும் முயற்சிக்கவேண்டும் என்று, தற்போதைய சூழல்களின் ஒளியில், மீண்டும் நான் அழைப்பு விடுக்கிறேன்” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

“ஆயுதங்களைச் சேமித்து வைத்திருப்பது, தனிப்பட்ட மற்றும், நாடுகளின் பாதுகாப்பிற்காக என்ற தருக்கமுறை மாற்றப்படவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது, இந்த வாதமுறை, மக்களுக்கு இடையே, நாடுகளுக்கு இடையே, நம்பிக்கையின்மை மற்றும், அச்சம் நிறைந்த சூழலையே வளர்க்கும்வேளை, இது, ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளின் ஆதாயங்கள் அதிகரிக்கவே உதவும்” என்ற சொற்கள், திருத்தந்தையின் நான்காவது டுவிட்டர் செய்தியில் வெளியாகியிருந்தன , 

திருத்தந்தையின் ஐந்தாவது டுவிட்டர் செய்தியில், “தங்களின் அடிப்படை உரிமைகள் மற்றும், மாண்பு, குறிப்பாக, வாழ்வு மற்றும், பள்ளிக்குச் செல்லும் உரிமை மறுக்கப்படுகின்ற சிறார் மீது, சிறப்பான கவனம் செலுத்தப்படவேண்டும் என்று, அரசு அதிகாரிகளுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

மேலும், ஐக்கிய நாடுகள் நிறுவனம் உருவாக்கப்பட்டதன் 75ம் ஆண்டு நிறைவு சிறப்பிக்கப்பட்டுவருவதையொட்டி, #UN75@UN என்ற 'ஹாஷ்டாக்'குடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று, நான்கு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐ.நா.நிறுவனத்தின் 75வது பொது அமர்வுக்கு, காணொளி வழியாக ஆற்றிய உரையைக் கேட்கவும், வாசிக்கவும் உதவும் முகவரிகளும், இச்செய்தியோடு இணைக்கப்பட்டிருந்தன.

http://www.vatican.va/content/francesco/en/messages/pont-messages/2020/documents/papa-francesco_20200925_videomessaggio-onu.html

அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிக்கும் உலக நாள், ஐ.நா. பொது அவையில் 2013ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இன்றைய காலக்கட்டத்தில் நாடுகளில், 13,400 அணு ஆயுதங்கள் சேமிப்பில் உள்ளன.

லூர்து அன்னை மரியா கெபி

மேலும், இச்சனிக்கிழமை உரோம் நேரம் மாலை 5 மணிக்கு, வத்திக்கான் தோட்டத்திலுள்ள லூர்து அன்னை மரியா கெபியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் காவல்துறையினருக்கு திருப்பலி நிறைவேற்றுகிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 September 2020, 14:53