பன்னாட்டு புற்றுநோய் மருத்துவக் கழகத்தினர் சந்திப்பு பன்னாட்டு புற்றுநோய் மருத்துவக் கழகத்தினர் சந்திப்பு 

பன்னாட்டு புற்றுநோய் மருத்துவக் கழகத்தினர் சந்திப்பு

ஒவ்வொரு நோயாளியும், மருத்துவக் குறிப்புக்கள் அடங்கிய கோப்பு அல்ல, மாறாக, அவர் ஒரு மனிதர். இந்த மாண்புடன் தனக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை உணரும் நோயாளி, மருத்துவக் குழுவினரிடம் மிகுந்த நம்பிக்கை வைப்பார் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கடுமையான நோய்களால் துன்புறும் பெண்களுக்கு சிகிச்சை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும், அதேநேரம், மருத்துவப் பணியாளர்கள், மாண்புநிறைந்த சூழலில் பணியாற்றுவதற்கு உதவிசெய்யப்படுவது முக்கியம் என்பது, அனைவராலும் மறக்கப்படக்கூடாது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இவ்வெள்ளியன்று கூறினார்.

பன்னாட்டு புற்றுநோய் மருத்துவக் கழகம் நடத்திய ஆண்டுக் கூட்டத்தில் பங்குபெற்ற ஏறத்தாழ முன்னூறு பிரதிநிதிகளை, செப்டம்பர் 11, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிகவும் வேதனையளிக்கும் நோய்களால் துன்புறும் பெண்களைப் பராமரித்துவரும், இக்கழகத்தினருக்கு தன் நன்றியைத் தெரிவித்தார்.

ஒவ்வொரு நோயாளியும், மருத்துவக் குறிப்புக்கள் அடங்கிய கோப்பு அல்ல, மாறாக, அவர் ஒரு மனிதர் என்றுரைத்த திருத்தந்தை, இந்த மாண்புடன் தனக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை உணரும் நோயாளி, மருத்துவக் குழுவினரிடமும், தனது நோய் குணமாகும் என்பதிலும் மிகுந்த நம்பிக்கை வைப்பார் என்றும் கூறினார். 

நோயாளி ஒருவரை, மனிதப்பண்புகளுடன் பராமரிப்பது, ஒருங்கிணைந்த நலவாழ்வு வழங்கும் பணிகளில் ஒன்றாக நோக்கப்படவேண்டும், ஆனால், இது பலநேரங்களில், தனிப்பட்ட மருத்துவரின் கனிவான பண்பால் இடம்பெறுகின்றது என்றுரைத்த திருத்தந்தை, நோயாளிகளோடு கட்டியெழுப்படவேண்டிய உறவுகளில், நிதிசார்ந்த எண்ணங்கள், ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.  

நோயாளிகளின் தனிப்பட்ட, பொருளாதார மற்றும், சமுதாயச் சூழல்கள் எப்படியிருந்தாலும், அவற்றைப் பொருட்படுத்தாது, அவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் கவனம் செலுத்தி, அவர்களின் தேவைகளுக்கு உதவி, அவர்களின் நியாயமான கேள்விகளுக்குப் பதிலளித்து வரும் பல்வேறு அரசுசாரா அமைப்புகளுக்கு, திருத்தந்தை, தன் நன்றியை வெளியிட்டுள்ளார்.

பன்னாட்டு புற்றுநோய் கழகத்தினர் மேற்கொண்டுவரும், புற்றுநோய் குறித்த ஆய்வுகள் நல்ல பலனைத் தருவதற்கு, தன் வாழ்த்துக்களையும் செபங்களையும் தெரிவிப்பதாகக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நோயாளிகளைப் பராமரிப்பதில் நல்ல சமாரியர்களாக நாம் செயல்பட அழைக்கப்பட்டுள்ளோம் என்பதையும் நினைவுபடுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 September 2020, 13:28