ஆயர் சூசைமாணிக்கம் அவர்கள் ஆயர் சூசைமாணிக்கம் அவர்கள் 

சிவகங்கை மறைமாவட்ட ஆயரின் பணி ஓய்வு ஏற்பு

ஆயர் சூசைமாணிக்கம் அவர்கள், 2005ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி, சிவகங்கை மறைமாவட்டத்திற்கு வாரிசு ஆயராகவும், அதே ஆண்டு செப்டம்பர் முதல் தேதி, சிவகங்கை மறைமாவட்டத்திற்கு ஆயராகவும் நியமிக்கப்பட்டார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தமிழகத்தின் சிவகங்கை மறைமாவட்ட ஆயர் செபமாலை சூசைமாணிக்கம் அவர்கள் பணி ஓய்வு பெறுவதற்கு சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்தை, செப்டம்பர் 25, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏற்றுக்கொண்டுள்ளார்.

1945ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி பிறந்த ஆயர் சூசைமாணிக்கம் அவர்கள், 1971ம் ஆண்டில் அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருப்பொழிவு செய்யப்பட்டார். இவர், 2005ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி, சிவகங்கை மறைமாவட்டத்திற்கு வாரிசு ஆயராகவும், அதே ஆண்டு செப்டம்பர் முதல் தேதி அதே மறைமாவட்டத்திற்கு ஆயராகவும் நியமிக்கப்பட்டார்.

செப்டம்பர் 25, இவ்வியாழன், தன் 75வது பிறந்தநாளன்று, ஆயர் செபமாலை சூசைமாணிக்கம் அவர்கள், தன் பணி ஓய்வு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளார். 

கர்தினால் பெச்சு பணி ஓய்வு

மேலும், புனிதர் நிலைக்கு உயர்த்தும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் திருப்பீடப் பேராயத்தின் தலைவர், கர்தினால் ஜொவான்னி ஆஞ்சலோ பெச்சு அவர்கள் சமர்ப்பித்த பணி ஓய்வு விண்ணப்பத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார் என்று திருப்பீடத் தகவல்தொடர்பகம், செப்டம்பர் 24, இவ்வியாழனன்று அறிவித்துள்ளது.

கர்தினால் பெச்சு அவர்கள், திருப்பீட புனிதர் பேராயத்தின் தலைமைப்பணி மற்றும், கர்தினாலுக்குரிய உரிமைகளிலிருந்து விலகிக்கொள்வதாக கேட்டுக்கொண்டதன்பேரில், திருத்தந்தை, கர்தினாலின் விண்ணப்பத்திற்கு இசைவு தெரிவித்திருக்கிறார் என்று, திருப்பீடத் தகவல்தொடர்பகம் மேலும் கூறியது.

1948ம் ஆண்டு பிறந்த கர்தினால் பெச்சு அவர்கள், 2011ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு முடிய, திருப்பீடச் செயலகத்தில் முக்கிய பொறுப்பில் பணியாற்றியபின், 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி, புனிதர் நிலை பேராயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 September 2020, 15:03