பிரான்ஸ் நாட்டின் சுற்றுச்சூழல் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் பிரான்ஸ் நாட்டின் சுற்றுச்சூழல் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

சுற்றுச்சூழல் அறிஞர்கள், ஆர்வலர்களுடன் திருத்தந்தை

இவ்வுலகம் என்ற பூங்காவை, மனிதர்கள் உழுது, பயிரிட்டு, பாதுகாக்கவேண்டுமே தவிர, அதனை, தங்கள் உரிமைச் சொத்தாகப் பாவித்து, அழிப்பது தவறு - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நாம் அனைவரும், ஒரு பொதுவான இல்லத்தில் வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்றும், இந்த இல்லம் தற்போது, சீர்குலைந்து வருவதை நாம் அனைவரும் உணர்ந்து வருகிறோம் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரான்ஸ் நாட்டிலிருந்து, தன்னைச் சந்திக்க வந்திருந்த சுற்றுச்சூழல் அறிஞர்களிடம் கூறினார்.

பிரான்ஸ் ஆயர் பேரவையுடன் இணைந்து உழைக்கும் சுற்றுச்சூழல் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் அடங்கிய குழுவினரை, செப்டம்பர் 3, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகில் நாம் சந்தித்துவரும் இந்தக் கொள்ளைநோய், மனிதர்களின் வலுவற்ற நிலையை நினைவுறுத்தி வருகிறது என்று கூறினார்.

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வால் மகிழ்வு

சுற்றுச்சூழல் சீரழிவைக் குறித்த விழிப்புணர்வு உலகெங்கும் நிகழ்ந்துவருவது தனக்கு மகிழ்வைத் தருகிறது என்று கூறிய திருத்தந்தை, உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்படும் அரசியல், பொருளாதார தீர்மானங்களில், சுற்றுச்சூழலைப் பற்றிய அக்கறையையும் காணமுடிகிறது என்று எடுத்துரைத்தார்.

நம் பொதுவான இல்லமான இந்தப் பூமிக்கோளத்தைக் காக்கும் பணியில், கத்தோலிக்கத் திருஅவை முழுமனதோடு ஈடுபட்டுவருகிறது என்பதை, குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுற்றுச்சூழல் பிரச்சனையைத் தீர்க்கும் அனைத்து தீர்வுகளும், கத்தோலிக்கத் திருஅவையிடம் இல்லை என்பதையும் உணர்கிறோம் என்று கூறினார்.

'சுற்றுச்சூழல் குறித்த மனமாற்றம்'

நீடித்த நிலையான மாற்றங்கள் உருவாகவேண்டுமெனில், அது, நல்ல வழிகளில் உருவாக்கப்பட்டுள்ள ஒவ்வொருவரின் மனசாட்சியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதை, தன் உரையில் வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை, இந்தக் கருத்தையே, 'சுற்றுச்சூழல் குறித்த மனமாற்றம்' ஏற்படவேண்டும் என்று தான் கூறிவருவதாக எடுத்துரைத்தார்.

இவ்வுலகம், தானாக, எதேச்சையாக உருவாகவில்லை, மாறாக, அது, இறைவனின் அன்பு திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகில் படைக்கப்பட்டுள்ள அனைத்து உயிர்களும், இறைவனின் அன்பானத் தொடுதலால் உருவானவை என்று கூறினார்.

படைப்பின் பாதுகாவலர்கள், உரிமையாளர்கள் அல்ல

இவ்வுலகம் என்ற பூங்காவை, மனிதர்கள் உழுது, பயிரிட்டு, பாதுகாக்கவேண்டுமே தவிர, அதனை, தங்கள் உரிமைச் சொத்தாகப் பாவித்து, அழிப்பது தவறு என்பதை, வலியுறுத்தியத் திருத்தந்தை, தனக்கு உரிமையானது என்று மனிதர்கள் எண்ணுவதே பல்வேறு சுயநல திட்டங்களுக்கு நம்மை இட்டுச்செல்கிறது என்பதையும் குறிப்பிட்டார்.

நாம் சந்திக்கும் சுற்றுச்சூழல் நெருக்கடியைத் தீர்க்க, மனிதர்களிடையே நிலவும் அநீதிகளையும் தீர்க்கவேண்டும் என்றும், சமுதாய நீதியும், சுற்றுச்சூழல் நலமும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொண்டது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிரான்ஸ் நாட்டு சுற்றுச்சூழல் அறிஞர்களிடம் கூறினார்.

இந்தக் கொள்ளைநோயும், சுற்றுச்சூழல் நெருக்கடிகளும் நம் உள்ளங்களை சோர்வடையச் செய்தாலும், கிறிஸ்தவர்கள் என்ற அடிப்படையில் நாம் நம்பிக்கையை இழக்காமல் முயற்சிகளை மேற்கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம் என்ற கருத்தை வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 September 2020, 14:35