லெஸ்போஸ் தீவில் புலம்பெயர்ந்தோர் லெஸ்போஸ் தீவில் புலம்பெயர்ந்தோர் 

குடிபெயர்தலை சரியாகப் புரிந்துகொள்வதும் பதிலிறுப்பதும்...

ஐரோப்பிய நாடுகளைப் பொருத்தவரை, மத்தியதரைக் கடலில் நிகழும் துயரங்கள், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சவாலாக அமைந்துள்ளன - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகளில் பணியாற்றிவரும் “Snapshots from the borders”, அதாவது, "எல்லைகளிலிருந்து பதியப்பட்டக் காட்சிகள்" என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 10 இவ்வியாழனன்று, திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றினார்.

இத்தாலியின் தெற்கில் அமைந்துள்ள லாம்பதூசா தீவின் நகராட்சித் தலைவர், திருவாளர் சால்வத்தோரே மார்த்தெல்லோ (Salvatore Martello) அவர்கள் தலைமையில் வந்திருந்த அக்குழுவில், புதிதாக இணைந்துள்ள உறுப்பினர்களை, திருத்தந்தை, தன் உரையின் துவக்கத்தில் சிறப்பாக வரவேற்றுப் பேசினார்.

மனிதாபிமான உணர்வுகளுடன் பதிலிறுக்க...

உலகெங்கும் பரவியுள்ள குடிபெயர்தல் என்ற ஓர் உண்மையை, சரியான முறையில் புரிந்துகொள்வதும், அதற்கு, மனிதாபிமான உணர்வுகளுடன் பதிலிறுப்பதும், இவ்வமைப்பினரின் குறிக்கோள் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையில் சிறப்பாக குறிப்பிட்டார்.

குடிபெயர்தல் மற்றும் புலம்பெயர்தல் என்பது உலகெங்கும் நிகழ்ந்துவரும் உண்மை என்றாலும், ஐரோப்பிய நாடுகளைப் பொருத்தவரை, மத்தியதரைக் கடலில் நிகழும் துயரங்கள், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சவாலாக அமைந்துள்ளன என்று, திருத்தந்தை இவ்வுரையில் சுட்டிக்காட்டினார்.

சுவர்களை எழுப்புவதற்குப் பதில், வரவேற்பு

புலம்பெயர்ந்தோரையும், குடிபெயர்ந்தோரையும் பிரச்சனைகள் என்ற கோணத்தில் காணாமல், அவர்கள் அனைவரும், மிக அதிகத் தேவையில் இருக்கும் மனிதப் பிறவிகள் என்ற கண்ணோட்டத்தில் காண்பதற்கு, “Snapshots from the borders” இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உதவியாக உள்ளனர் என்று திருத்தந்தை கூறினார்.

சுவர்களை எழுப்புவதற்குப் பதில், வரவேற்பையும், சந்திப்புக் கலாச்சாரத்தையும் ஊக்குவிக்கும் இவ்வியக்கத்துடன் கத்தோலிக்கத் திருஅவை முழுமனதோடு ஒத்துழைக்கும் என்ற உறுதிமொழியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கினார்.

வந்திருந்த அனைவரையும், “Snapshots from the borders” இயக்கத்தினரையும், இறைவன் ஆசீர்வதிக்கவும், அன்னை மரியா பாதுகாக்கவும் வேண்டும் என்ற வேண்டுதலுடன் திருத்தந்தை தன் உரையை நிறைவு செய்தார்.

'நினைவுகூரும், மற்றும் வரவேற்கும் ஐரோப்பிய நாள்'

2013ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி, 500க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோருடன் மத்திய தரைக்கடலில் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து, 368 பேர் உயிரிழந்தனர், 155 பேர் காப்பாற்றப்பட்டனர்.

இந்த துயர நிகழ்வை நினைவுறுத்தும்வண்ணம், “Snapshots from the borders” இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 3ம் தேதியை, 'நினைவுகூரும், மற்றும் வரவேற்கும் ஐரோப்பிய நாள்' என்று சிறப்பித்து வருகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 September 2020, 13:52