வத்திக்கான் வத்திக்கான்  

வத்திக்கான் பொருளாதார அவைக்கு ஆறு பெண் நிபுணர்கள்

ஜெர்மனியைச் சேர்ந்த பேராசிரியர் Charlotte Kreuter-Kirchhof அவர்கள், Hildegaris எனப்படும் ஜெர்மனியிலுள்ள கத்தோலிக்க பெண்கள் இயக்கத்தின் தலைவராக இருந்து, தேவையில் இருக்கும் மாணவிகளுக்கு ஆதரவளித்து வருகிறார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

செப மனிதர்கள், தங்களின் முகங்களில், ஒளியின் பிரதிபலிப்பைக் கொண்டுள்ளனர், வாழ்வின் இருள்நிறைந்த நாள்களிலும்கூட, கதிரவன், அவர்களில் சுடர்விடுவதை நிறுத்துவதில்லை என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 07, இவ்வெள்ளியன்று தன்  டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

வத்திக்கான் பொருளாதார அவை

மேலும், 2014ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கிய, வத்திக்கான் பொருளாதார அவைக்கு, ஆறு பெண் வல்லுனர்கள் உட்பட 13 பேரை, ஆகஸ்ட் 06, இவ்வியாழனன்று புதிய உறுப்பினர்களாக நியமித்துள்ளார்.

Fidelis dispensator et prudens என்ற திருத்தூது மடல் வழியாக திருத்தந்தை உருவாக்கிய இந்த பொருளாதார அவை, திருப்பீட தலைமையகத்திலுள்ள பல்வேறு துறைகள், திருப்பீடம் மற்றும், வத்திக்கான் நகர நாட்டோடு தொடர்புடைய நிறுவனங்கள் ஆகியவற்றின் நிர்வாகங்கள் மற்றும், நிதி சார்ந்த நடவடிக்கைகளின் பொருளாதார நிர்வாகத்தை மேற்பார்வையிடுகின்றது.  

இந்த பொருளாதார அவையிலுள்ள 15 உறுப்பினர்களுள், எட்டுப் பேர், கர்தினால் மற்றும் ஆயர்களாக உள்ளனர். இவர்கள், உலகளாவிய திருஅவையைப் பிரதிபலிக்கும் நோக்கத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மற்ற ஏழு பேர், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பொருளாதார வல்லுனர்கள் மற்றும், அந்த துறையில் நம்பிக்கைக்குரியவர்களாக உள்ளவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.    

ஜெர்மனியின் Munich மற்றும் Freising பேராயர் கர்தினால் Reinhard Marx அவர்கள், வத்திக்கான் பொருளாதார அவையின் ஒருங்கிணைப்பாளராகத் தொடர்ந்து பணியாற்றுவார். தென்னாப்ரிக்காவின் டர்பன் பேராயர் கர்தினால் Wilfrid Foix Napier அவர்கள், தனது 80வது வயதுவரை தொடர்ந்து, அந்த அவையின் உறுப்பினராக இருப்பார்.

மேலும், இவ்வியாழனன்று இந்த பொருளாதார அவைக்கு, திருத்தந்தை நியமித்துள்ள 13 புதிய உறுப்பினர்களுள், ஜெர்மனி, இஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆறு பெண்களும் உள்ளடங்குவர்.

ஜெர்மனியைச் சேர்ந்த பேராசிரியர் Charlotte Kreuter-Kirchhof அவர்கள், Dusseldorf நகரிலுள்ள Heinrich-Heine பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். இவர், Hildegaris எனப்படும் ஜெர்மனியிலுள்ள கத்தோலிக்க பெண்கள் இயக்கத்தின் தலைவராக இருந்து, தேவையில் இருக்கும் மாணவிகளுக்கு ஆதரவளித்து வருகிறார்.  

ஜெர்மனியின் Marija Kolak அவர்கள், Berliner Volksbankல் பல்வேறு பொறுப்புக்களை வகித்து வருகிறார்.

இஸ்பெயின் நாட்டின் Maria Concepcion Osacar Garaicoechea அவர்கள், Azora குழுமத்தை உருவாக்கியவர்களுள் ஒருவர் மற்றும், SGIIC எனப்படும் Azora Capital மற்றும் Azora Gestion அமைப்பின் தலைவர் ஆவார்.

இஸ்பெயின் நாட்டின் Eva Castillo Sanz அவர்கள், இஸ்பெயினில் பல்வேறு முக்கிய நிறுவன மேலாண்மை அமைப்புகளில் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

பிரித்தானியாவைச் சேர்ந்தLeslie Jane Ferrar, Ruth Maria Kelly ஆகிய இருவரும், இத்தாலியரான Alberto Minali அவர்களும், பொருளாதாரத் துறைகளில் முக்கிய பொறுப்புக்களை வகித்து வருகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 August 2020, 12:57