புனித பேதுரு வளாகத்தில் கார்மேல் அன்னை மரியாவின் திரு உருவத்திற்குமுன் திருத்தந்தை பிரான்சிஸ் புனித பேதுரு வளாகத்தில் கார்மேல் அன்னை மரியாவின் திரு உருவத்திற்குமுன் திருத்தந்தை பிரான்சிஸ் 

கார்மேல் அன்னை மரியாவிடம் திருத்தந்தை வேண்டுதல்

"கார்மேல் மலை கன்னியே, எங்கள் அன்னையே, குற்றமற்ற கரங்களையும், தூய உள்ளத்தையும் கொண்டவர்களாய், அயலவரை பழித்துரைக்காமல், பொய் சொல்லாமல் வாழ எங்களுக்கு உதவியருளும்" - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூலை 16, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட கார்மேல் மலை அன்னை மரியா திருநாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  #OurLadyOfMountCarmel என்ற 'ஹாஷ்டாக்'குடன் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், அன்னையை நோக்கி வேண்டுதல் ஒன்றை எழுப்பியுள்ளார்.

"கார்மேல் மலை கன்னியே, எங்கள் அன்னையே, குற்றமற்ற கரங்களையும், தூய உள்ளத்தையும் கொண்டவர்களாய், அயலவரை பழித்துரைக்காமல், பொய் சொல்லாமல் வாழ எங்களுக்கு உதவியருளும். அவ்வாறு, நாங்கள் இறைவனின் மலை மீது ஏறிச்சென்று, அவரது ஆசீரையும், நீதியையும், மீட்பையும் பெறுவோம்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

மேலும், அகில உலக காரித்தாஸ் அமைப்பு, ஜூலை 16, இவ்வியாழனன்று, வலைத்தளம் வழியே, வெளியிட்ட ஆண்டறிக்கையில், கோவிட்-19 கொள்ளைநோய்க்குப்பின் எதிர்காலத்தை நோக்குதல் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத்தியக் கிழக்குப் பகுதிகளில் நிலவிவரும் பொருளாதாரத் தடைகள் குறித்தும், வறுமைப்பட்ட நாடுகளின் கடன்கள் இரத்து செய்யப்படவேண்டும் என்பதைக் குறித்தும் இவ்வறிக்கையில் விண்ணப்பங்கள் விடுக்கப்பட்டுள்ளன.

அகில உலக காரித்தாஸ் அமைப்பின் தலைவர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்களும், இவ்வமைப்பின் பொதுச்செயலர் திருவாளர் அலாய்ஸியஸ் ஜான் அவர்களும் வலைத்தளம் வழியே வழிநடத்திய இந்த மெய்நிகர் அமர்வில், தென் ஆப்ரிக்கா காரித்தாஸ் அமைப்பின் தலைவர் கர்தினால் வில்ஃப்ரெட் ஃபாக்ஸ் நேப்பியர் (Wilfrid Fox Napier) அவர்களும், லெபனான் காரித்தாஸ் மையத்தின் இயக்குனர் ரீத்தா இராயெம் (Rita Rhayem) அவர்களும் பங்கேற்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 July 2020, 14:14