திருத்தூதரான புனித யாக்கோபு திருத்தூதரான புனித யாக்கோபு 

இயேசு, நம் திருப்பயணத்தில் உடன்வருபவர்

கி.பி. 831ம் ஆண்டில், இஸ்பெயின் நாட்டின் வடமேற்கே, Liberon மலைக்கருகில் துறவி ஒருவருக்கு வியப்புக்குரிய ஒளிவெள்ளம் ஒன்று தெரியவே, அந்த இடத்தில் இருந்த ஒரு கல்லறையில், "இங்கே செபதேயு மற்றும், சலோமியின் மகனான Jacobusவின் உடல் உள்ளது" என்று பொறிக்கப்பட்டிருந்தது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“ஓர் உண்மையான திருப்பயணி, மிக மெதுவாக நடப்பவரின் வேகத்தில் செல்வதற்குத் திறன் படைத்தவர், இவ்வாறு செய்ய வல்லவர் இயேசு. அவர் நம் திருப்பயணத்தின் தோழர், அவர் நம் நிலைமையை மதிப்பவர், மற்றும், அந்த வேகத்தை விரைவுபடுத்துபவர் அல்ல  அவர், பொறுமையின் ஆண்டவர் அவர்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளார்.

 உண்மையான திருப்பயணி யார் என்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 25, இச்சனிக்கிழமையன்று, தன் டுவிட்டர் செய்தி வழியாக, இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

சந்தியாகோ பாதை

ஜூலை 25, இச்சனிக்கிழமையன்று, திருஅவை, திருத்தூதரான புனித யாக்கோபுவின் திருவிழாவைச் சிறப்பிக்கின்றது. இவர் *பெரிய யாக்கோபு* எனவும் *சந்தியாகப்பர்* எனவும் அழைக்கப்படுகிறார். இஸ்பெயின் நாட்டில், இப்புனிதரின் திருத்தலம் நோக்கிச் செல்லும், புனித சந்தியாகோ அதாவது புனித யாக்கோபு நடை திருப்பயணம் அல்லது, புனித யாக்கோபுவின் பாதை என்பது, வரலாற்றிலும், கிறிஸ்தவத்திலும், மிக முக்கியமான சாலைகளில் ஒன்றாக உள்ளது.

பிரேசில் நாட்டு புகழ்பெற்ற நாவல் ஆசிரியரும், சிறந்த பாடலாசிரியருமான Paulo Coelho de Souza அவர்கள், இது குறித்து இவ்வாறு எழுதியுள்ளார்: பழங்கால திருப்பயணிகளின் பாரம்பரிய உணர்வு, உங்களது திருப்பயணத்திலும் உடன்வருகிறது. இப்பயணத்தில் நீங்கள் தலையில் அணிந்திருக்கும் தொப்பி, கதிரவனின் வெப்பம் மற்றும், தீய எண்ணங்களிலிருந்து உங்களைக் காக்கின்றது. உங்களது மேலாடை மழை மற்றும், தீய சொற்களிலிருந்து உங்களைக் காக்கின்றது. உங்களது ஊன்றுகோல், பகைவர்கள் மற்றும், தீய செயல்களிலிருந்து உங்களைக் காக்கின்றது. கடவுள், புனித யாக்கோபு, அன்னை மரியா ஆகிய மூவரும், உங்கள் பயணத்தின் ஒவ்வோர் இரவிலும், ஒவ்வொரு நாளிலும் உங்களை ஆசீர்வதிப்பார்களாக.

புனித யாக்கோபுவின் கல்லறை

புனித யாக்கோபுவின் கல்லறை பற்றி மரபு வழியாக ஒரு செய்தி சொல்லப்படுகிறது. கி.பி. 831ம் ஆண்டில், இஸ்பெயின் நாட்டின் வடமேற்கே, Liberon  மலைக்கருகில் துறவி ஒருவருக்கு வியப்புக்குரிய ஒளிவெள்ளம் ஒன்று தெரியவே, அந்த இடத்தில் ஒரு கல்லறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. "இங்கே செபதேயு மற்றும், சலோமியின் மகனான யாக்கோபுவின் (Jacobus) உடல் உள்ளது" என்று அதில் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தின் பெயர் "கம்போஸ்த்தெல்லா (Compostela) அதாவது விண்மீன் வயல்" என்பதாகும். இந்த இடத்தை வைத்து, பிற்காலத்தில் அங்கு விரிவடைந்த நகரத்திற்கு, Santiago de Compostela என்று பெயரிடப்பட்டது. இந்த இடத்தில் 1075ம் ஆண்டில் பசிலிக்கா எழுப்பப்பட்டு, அது புனித யாக்கோபுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. மத்திய காலத்திலிருந்து, இந்த திருத்தலத்திற்கு, திருப்பயணிகள் பெருமளவாகச் செல்கின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 July 2020, 12:51