மாற்றுத்திறன் கொண்ட ஒலிம்பிக் விளையாட்டு வீரர் அலெக்ஸ் சனார்தி மாற்றுத்திறன் கொண்ட ஒலிம்பிக் விளையாட்டு வீரர் அலெக்ஸ் சனார்தி 

மாற்றுத்திறன் கொண்ட ஒலிம்பிக் வீரருக்கு திருத்தந்தையின் மடல்

"அன்பு அலெஸ்ஸாந்த்ரோ, வாழ்வு திடீரென நின்றுபோனால், அதை எவ்விதம் மீண்டும் துவக்க இயலும் என்பதற்கு, உங்கள் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு" – திருத்தந்தையின் மடல்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"அன்பு அலெஸ்ஸாந்த்ரோ, வாழ்வு திடீரென நின்றுபோனால், அதை எவ்விதம் மீண்டும் துவக்க இயலும் என்பதற்கு, உங்கள் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாற்றுத்திறன் கொண்ட ஒலிம்பிக் விளையாட்டு வீரர் அலெக்ஸ் சனார்தி (Alex Zanardi) அவர்களுக்கு அனுப்பிய ஒரு மடலில் கூறியுள்ளார்.

Formula 1 என்றழைக்கப்படும் அதிவிரைவு கார் பந்தயங்களில் கலந்துகொண்ட அலெக்ஸ் சனார்தி அவர்கள், 2001ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு விபத்தில், தன் கால்கள் இரண்டையும் இழந்தாலும், மீண்டும் அவர் அந்த பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்றார்.

அடுத்த சில ஆண்டுகளில், மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள கரங்களைக் கொண்டு இயக்கப்படும் சைக்கிள் ஓட்டுவதில் தேர்ச்சிபெற்று, 2012ம் ஆண்டு இலண்டனிலும், 2016ம் ஆண்டு ரியோவிலும் நடைபெற்ற மாற்றுத்திறன் கொண்டோர் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் தங்கப் பதக்கங்களைப் பெற்றார்.

56 வயது நிறைந்த இந்த வீரர், இவ்வாண்டு ஜூன் 19ம் தேதி, மீண்டும் ஒரு விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவருக்கு, தன் கைப்பட எழுதிய ஒரு மடலை அனுப்பியுள்ளார் என்று, இத்தாலிய செய்தித்தாள், “La Gazzetta dello Sport” கூறியுள்ளது.

உடலளவில் ஒருவருக்கு குறை ஏற்படும்போது, அதை எவ்வாறு பயனுள்ள வகையில் மாற்றி, மனித சமுதாயத்தை உயர்த்தமுடியும் என்பதற்கு, அலெக்ஸ் சனார்தி அவர்கள் ஓர் எடுத்துக்காட்டு என்று, திருத்தந்தை இம்மடலில் கூறியுள்ளார்.

சியென்னா நகரின் மருத்துவமனை ஒன்றில், தீவிரச் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அலெக்ஸ் சனார்தி அவர்களுடன் தான் செபத்தில் ஒன்றித்திருப்பதாகவும், அவரையும், அவரது குடும்பத்தினர் அனைவரையும் அன்னை மரியாவின் பாதுகாப்பில் ஒப்படைப்பதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மடலில் எழுதியுள்ளார்.

இத்தாலி நாட்டில், கோவிட் 19 கொள்ளைநோயினால் அதிகம் பாதிக்கபப்ட்ட Bergamo மற்றும் Brescia நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு உதவிகள் செய்யும் வகையில், திருத்தந்தையின் ஊக்கத்தால் உருவாக்கப்பட்டு, "நாம் இணைந்து ஓடுகிறோம்" என்ற விருதுவாக்குடன் நடைபெற்ற பந்தயங்களில் அலெக்ஸ் சனார்தி அவர்கள் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 19ம் தேதி, Pienza என்ற நகரில் நடைபெற்ற மற்றொரு பந்தயத்தில் பங்கேற்ற வேளையில், அலெக்ஸ் சனார்தி அவர்கள் விபத்துக்குள்ளாகி, சியென்னாவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 June 2020, 14:05