ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலையுண்டதையடுத்து போராட்டம் ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலையுண்டதையடுத்து போராட்டம் 

எல் பாசோ ஆயருக்கு திருத்தந்தையின் தனிப்பட்ட பாராட்டு

ஜூன் 1, இத்திங்களன்று, எல் பாசோ மறைமாவட்டத்தின் ஆயர் Mark Seitz அவர்களுடன், அருள்பணியாளர்கள், பொதுநிலையினர், ஆகியோரும் இணைந்து, 9 நிமிடங்கள் தரையில் முழந்தாள் படியிட்டு செபித்தனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் ஹோஸே கோமஸ் அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைத்த அதே நாளில், டெக்சாஸ் மாநிலத்தின் எல் பாசோ மறைமாவட்ட ஆயர் Mark Seitz அவர்களையும், தனிப்பட்ட முறையில், தொலைப்பேசியில் அழைத்தார் என்று CNA கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

மூன்று நிமிடங்கள் நீடித்த இந்தத் தொலைப்பேசி அழைப்பு இஸ்பானிய  மொழியில் இருந்ததென்று கூறிய ஆயர் Seitz அவர்கள், தங்கள் மறைமாவட்ட மக்கள், முழந்தாள்படியிட்டு இறைவேண்டல் எழுப்பியவண்ணம் இந்த போராட்டங்களில் கலந்துகொண்டதற்கு திருத்தந்தை தன் பாராட்டுக்களை தெரிவித்ததாக கூறினார்.

மே மாதம் 25ம் தேதி, மின்னியாபொலிஸ் நகரில், George Floyd அவர்கள் கொலையுண்டதையடுத்து பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் துவங்கிய வேளையில், எல் பாசோ ஆயர் Seitz அவர்கள், 'கறுப்பின மக்களின் வாழ்வு மதிப்பிற்குரியது' என்ற வாசகத்துடன் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், Floyd அவர்களின் கழுத்தின் மீது, காவல்துறை அதிகாரி ஒருவர், 9 நிமிடங்கள் முழங்காலால் அழுத்தி வதைத்ததை நினைவுகூரும் வகையில், ஜூன் 1, இத்திங்களன்று, எல் பாசோ மறைமாவட்டத்தின் ஆயர் Mark Seitz அவர்களுடன், அருள்பணியாளர்கள், பொதுநிலையினர், ஆகியோரும் இணைந்து, 9 நிமிடங்கள் தரையில் முழந்தாள் படியிட்டு செபித்தனர்.

இந்த முயற்சியைப்பற்றி கேள்விப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர் Seitz அவர்களை தனிப்பட்ட முறையில் தொலைப்பேசியில் அழைத்து, தன் பாராட்டுக்களை தெரிவித்தார் என்று அம்மறைமாவட்ட அறிக்கையொன்று கூறுகிறது. (CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 June 2020, 13:36