அப்பரசிதா அன்னை மரியா, திருத்தந்தை பிரான்சிஸ் அப்பரசிதா அன்னை மரியா, திருத்தந்தை பிரான்சிஸ்  

அப்பரசிதா அன்னை மரியாவிடம் செபித்துவரும் திருத்தந்தை

கோவிட் 19 கொள்ளைநோய் காலத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரேசில் நாட்டின் மனாவுஸ் பேராயர், São Paulo பேராயர், அப்பரசிதா பேராயர் ஆகிய மூவரையும், வெவ்வேறு நாள்களில், தொலைப்பேசி வழியே தொடர்பு கொண்டுள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூன் 14 இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் கிறிஸ்துவின் தூய்மைமிகு உடல் மற்றும் இரத்தம் பெருவிழாவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 11 இவ்வியாழனன்று, ‘ஆண்டவரின் உடல்’ என்று பொருள்படும் #CorpusDomini என்ற 'ஹாஷ்டாக்'குடன் தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

"இயேசு, பாவிகளை வரவேற்று, அவர்களோடு உண்கிறார். இதுவே நம் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு திருப்பலியிலும், ஒவ்வொரு ஆலயத்திலும் நிகழ்கிறது. இயேசு தன் விருந்துக்கு நம்மை வரவேற்பதில் மகிழ்கிறார், அங்கு அவர் தன்னையே நமக்காக வழங்குகிறார்" என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரேசில் நாட்டின் அப்பரசிதா (Aparecida) உயர் மறைமாவட்ட பேராயர் Dom Orlando Brandes அவர்களை, ஜூன் 10, இப்புதனன்று, தொலைப்பேசியில் அழைத்து, கோவிட் 19 நெருக்கடியால் துன்புறும் பிரேசில் மக்களுக்காக தான் செபித்து வருவதாகக் கூறினார் என்று, அப்பேராயர் கூறியுள்ளார்.

பிரேசில் நாட்டு தொலைக்காட்சி நிகழ்வில் பேசிய பேராயர் பிரான்டெஸ் அவர்கள், திருத்தந்தை தங்களை அழைத்தது, கிறிஸ்துவின் திருஉடல் திருநாளுக்கென வழங்கப்பட்ட ஒரு கொடையாக அமைந்தது என்றும், பிரேசில் மக்கள், அப்பரசிதா அன்னை மரியாவிடம் தங்களையே வழங்குமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார் என்றும் கூறினார்.

2007ம் ஆண்டு, Buenos Aires பேராயராகவும், 2013ம் ஆண்டு, ரியோ நகரில் நடைபெற்ற உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள வந்திருந்தபோதும் தான் அப்பரசிதா அன்னை மரியா திருத்தலத்திற்கு வந்திருந்ததை, திருத்தந்தை இந்த தொலைப்பேசி அழைப்பில் குறிப்பிட்டார் என்று பேராயர் பிரான்டெஸ் அவர்கள் கூறினார்.

கோவிட் 19 கொள்ளைநோய் காலத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரேசில் நாட்டின் மனாவுஸ் பேராயர் Dom Leonardo Steiner அவர்களையும், அதன் பின்னர், São Paulo பேராயர், கர்தினால் Odilo Pedro Scherer அவர்களையும், தற்போது மூன்றாவது முறையாக, அப்பரசிதா பேராயர் பிரான்டெஸ் அவர்களையும் தொலைப்பேசி வழியே தொடர்பு கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 June 2020, 13:43