திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால் தாக்லே திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால் தாக்லே  

கர்தினால் தாக்லே - கர்தினால்கள் அவையில் புதிய நிலை

62 வயது நிரம்பிய கர்தினால் தாக்லே அவர்கள், பிலிப்பீன்ஸ் நாட்டின் மனிலா உயர் மறைமாவட்டத்தின் 32வது பேராயராக, 2011ம் ஆண்டு முதல், 2019ம் ஆண்டு வரை பணியாற்றினார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிலிப்பீன்ஸ் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்களை, கர்தினால்கள் அவையில் உயர்ந்த நிலையாகிய, கர்தினால்-ஆயர் என்ற நிலைக்கு, மே 01, இவ்வெள்ளியன்று நியமித்துள்ளார்.

நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் தலைவராக, 2020ம் ஆண்டு சனவரி மாதத்திலிருந்து பணியாற்றிவரும் கர்தினால் தாக்லே அவர்கள், ஆசியாவிலிருந்து இத்தகைய உயர் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ள முதல் கர்தினால் ஆவார்.

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், கீழை வழிபாட்டுமுறை பேராயத்தின் தலைவர் கர்தினால் லெயோனார்தோ சாந்த்ரி, ஆயர்கள் பேராயத்தின் தலைவர் Marc Ouellet போன்றோர் குழுவில், கர்தினால் தாக்லே அவர்களும் தற்போது இணைந்துள்ளார்.

அருள்பணியாளர் போராயத்தின் தலைவர் கர்தினால் Beniamino Stella அவர்களையும், மே 01, இவ்வெள்ளியன்று, கர்தினால்-ஆயர் என்ற நிலைக்கு நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

62 வயது நிரம்பிய கர்தினால் தாக்லே அவர்கள், பிலிப்பீன்ஸ் நாட்டின் மனிலா உயர் மறைமாவட்டத்தின் 32வது  பேராயராக, 2011ம் ஆண்டு முதல், 2019ம் ஆண்டு வரை பணியாற்றினார். இவரை, 2019ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் தலைவராக நியமித்தார்.

கர்தினால் தாக்லே அவர்கள், உலகளாவிய காரித்தாஸ் அமைப்பின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 May 2020, 14:38