புனித வியாழன் திருப்பலி 090420 புனித வியாழன் திருப்பலி 090420  

கோவிட்-19ஆல் இறந்த குருக்களை திருத்தந்தை நினைவுகூர்ந்தார்

இவ்வியாழனன்று திருத்தந்தை நிறைவேற்றிய, இயேசுவின் இறுதி இராவுணவு திருப்பலியில், அருள்பணியாளர்களின் திருப்பணிக்கு நன்றி தெரிவித்தார். அதோடு, நோயாளிகளுக்குப் பணியாற்றுகையில், உயிரிழந்த பல அருள்பணியாளர்களையும் அவர் நினைவுகூர்ந்தார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஏப்ரல் 09, இவ்வியாழன் உரோம் நேரம் மாலை ஆறு மணிக்கு, இந்திய-இலங்கை நேரம் இரவு 9.30 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், இயேசுவின் இறுதி இராவுணவு திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொரோனா தொற்றுக்கிருமி நோயாளிகளுக்குப் பணியாற்றுகையில் உயிரிழந்த அறுபதுக்கும் அதிகமான அருள்பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர் போன்ற அனைவரையும் நினைவுகூர்ந்தார்.

பன்னிரண்டு விசுவாசிகள், ஒன்பது பேர் கொண்ட பாடகர் குழு போன்றோருடன் நிறைவேற்றிய திருப்பலியில், அந்நேரத்தில் எழுந்த சிந்தனைகளை மறையுரையில் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, இயேசு, திருத்தூதர்களின் பாதங்களை எவ்வாறு கழுவினார் என்பதை விளக்கியதோடு, ஆண்டவர் நம்மை அன்புகூரவும், நமக்குப் பணிபுரியவும் அனுமதிப்போம் என்று, விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

பெயர் அறியப்படாத பல அருள்பணியாளர்களின் திருப்பணிக்கு நன்றி கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்களில் பலர் தங்கள் வாழ்வைத் தியாகம் செய்துள்ளனர், குறிப்பாக, அண்மையில், மருத்துவமனைகளிலும், மருத்துவப் பராமரிப்பு இல்லங்களிலும் கொரோனா தொற்றுக்கிருமி நோயாளிகளுக்குச் சேவையாற்றுகையில் உயிரிழந்துள்ளனர் என்று கூறினார்.  

பணிபுரிய அனுமதிப்போம்

திருநற்கருணை, பணி, அருள்பொழிவு ஆகிய, புனித வியாழன் வலியுறுத்தும் மூன்று மையக்கருத்தை அடிப்படையாக வைத்து ஆற்றிய உரையில், ஆண்டவர் நம்மை அன்புகூர அனுமதிப்பதன் வழியாக மட்டுமே நாம் மீட்கப்படுவோம் என்பதை கிறிஸ்தவர்களுக்கு நினைவுபடுத்தினார், திருத்தந்தை.

நீங்கள் எனது உடலை உண்ணாமலும், எனது குருதியை அருந்தாமலும் இருந்தால், விண்ணரசில் நுழையமாட்டீர்கள் என்று இயேசுவே செல்லியிருக்கிறார் என்ற திருத்தந்தை, ஆண்டவர் நமக்குப் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது கடினம் என்று கூறினார்.

இறுதி இரவு உணவின்போது, பேதுருவின் காலடிகளைக் கழுவ இயேசு வந்தபோது, இயேசுவுக்கும் பேதுருவுக்கும் இடையே (யோவா.13,1-15) நடந்த உரையாடலைக் குறிப்பிட்ட திருத்தந்தை, ஆண்டவரே, நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன்” என்று பேதுரு கூறியபோது,  இயேசு அவரைப் பார்த்து, “நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை” என்று கூறியதைக் குறிப்பிட்டார்.

எனவே, நாம் வளருவதற்கும், நம்மை மன்னிப்பதற்கும் அவரை அனுமதிக்க ஆண்டவரிடம் மன்றாட வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணித்துவ வாழ்வுக்கு நன்றி கூறினார்.  

 அருள்பணித்துவ வாழ்வுக்கு நன்றி

புதிதாக அருள்பொழிவு பெற்ற அருள்பணியாளர்கள் முதல் ஆயர்கள் வரை, திருத்தந்தையையும் சேர்த்து, அனைத்து அருள்பணியாளர்களுக்கும் அருகில் இருக்க விரும்புகிறேன் என்றும், இவர்கள், திருப்பலி நிறைவேற்றவும், திருப்பொழிவு செய்யவும் அருள்பொழிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் மறையுரையாற்றினார், திருத்தந்தை.

இந்த புனித வியாழன் காலையில் திருத்தைலம் மந்திரிக்கும் திருப்பலியை நிறைவேற்ற இயலவில்லை, பெந்தக்கோஸ்து பெருவிழாவுக்குமுன் இத்திருப்பலி நிறைவேற்றப்படும் என்று தான் நம்புவதாக எடுத்துரைத்த திருத்தந்தை, இந்த ஆண்டவரின் இறுதி இரவு உணவு திருவழிபாட்டில், அருள்பணித்துவம் பற்றியும், ஆண்டவருக்குத் தங்கள் வாழ்வை ஈந்த அனைத்து அருள்பணியாளர்கள் பற்றியும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை என்று கூறினார்.

பக்கத்து வீட்டுப் புனிதர்கள்

கொரோனா தொற்றுக்கிருமி பரவலால் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுவரும் இந்நாள்களில், இத்தாலியில் நோயாளிகளுக்குப் பணியாற்றுகையில், அந்நோய் தொற்றி,  மருத்துவமனைகளில் பணியாற்றிய மருத்துவர்கள், மற்றும், செவிலியர்களுடன், பல அருள்பணியாளர்களும் உயிரிழந்துள்ளனர், இவர்கள், ஆண்டவருக்கும், விசுவாசிகளுக்கும் தொண்டாற்றுகையில் தங்கள் வாழ்வைக் கையளித்த நம் பக்கத்து வீட்டுப் புனிதர்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்..

சிறிய நகரங்கள் மற்றும், சிறைகளில் நற்செய்திப் பணியாற்றும் பல பங்குத்தந்தையர் மற்றும், சிறைகளில் ஆன்மீகப் பணியாற்றும் அருள்பணியாளர்கள் பக்கம் என் நினைவு திரும்புகிறது என்ற திருத்தந்தை, மறைப்பணித் தளங்களில் பல அருள்பணியாளர்கள், இறந்து அடக்கம் செய்யப்பட்டுள்ளனர், இவர்களில் பலர், உலகின் கண்களிலிருந்து வெகு தொலைவில் உள்ளனர், இவர்களின் பெயர்கள் யாருக்குமே தெரியாது, இவர்கள் நல்ல அருள்பணியாளர்கள், இவர்களை என் இதயத்தில் ஏற்கிறேன் என்றும் கூறினார்.

அவதூறு மற்றும், அவமரியாதைகளால் துன்புற்று, தெருக்களில் நடந்துபோக முடியாமல் பல அருள்பணியாளர்கள் உள்ளனர் என்றும், இன்று நீங்கள் எல்லாரும் என்னோடு திருப்பலி பீடத்தில் இருக்கின்றீர்கள், பேதுரு போல, தலைக்கனமின்றி, உங்கள் காலடிகளைக் கழுவ ஆண்டவரை அனுமதியுங்கள், மற்றவரை மன்னிப்பதற்குக் கற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் மன்னித்தது போல, நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள், மன்னிப்பதற்கு ஒருபோதும் அஞ்சாதீர்கள் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

இறுதியில், அருள்பணித்துவம் என்ற அருளுக்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளர்களாகிய உங்களுக்காக நான் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன், இயேசு உங்களை அன்புகூர்கிறார், உங்கள் காலடிகளைக் கழுவ ஆண்டவரை அனுமதியுங்கள் என்று மட்டும் நான் உங்களிடம் கேட்கிறேன் என்று மறையுரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 April 2020, 10:46