புனித பேதரு வளாகம் புனித பேதரு வளாகம் 

இவ்வெள்ளி மாலையில் திருத்தந்தையோடு செபிக்கும் முறை

இவ்வெள்ளி இந்திய-இலங்கை நேரம் இரவு 10.30 மணிக்கு, உலகின் அனைத்து கத்தோலிக்கரும் சமூகத்தொடர்பு சாதனங்கள் வழியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் செபத்தில் ஒன்றித்திருக்க அழைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமி அவசரகால நெருக்கடியை முன்னிட்டு, மார்ச் 27, இவ்வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும், செபம் மற்றும், ஊருக்கும், அதாவது உரோம் நகருக்கும், உலகுக்குமென வழங்கும் 'ஊர்பி எத் ஓர்பி (Urbi et Orbi)' சிறப்பு ஆசீர், வத்திக்கான் செய்தித்துறை அலைவரிசைகள் வழியாக நேரடி ஒலி மற்றும், ஒளிபரப்பு செய்யப்படும்.

இவ்வெள்ளி மாலையில், திருத்தந்தை வழங்கும் ஊர்பி எத் ஓர்பி சிறப்பு ஆசீர் மற்றும், செபத்தில், தகுந்த தயாரிப்புடனும், பக்தியுடனும் பங்குகொள்ளும் எல்லாருக்கும் பரிபூரண பலன் உண்டு. திருத்தந்தை வழங்கும் இந்தப் பலனைப் பெறுவதற்கு, அண்மையில், திருப்பீட மனசாட்சி பேராயம் அறிவித்துள்ள நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

காலியான வளாகத்தில் செபம்

மக்கள் யாருமின்றி காலியாக இருக்கும் வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில், மார்ச் 27, இவ்வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு, அதாவது இந்திய-இலங்கை நேரம் இவ்வெள்ளி இரவு 10.30 மணிக்கு, உலகின் அனைத்து கத்தோலிக்கரும் சமூகத்தொடர்பு சாதனங்கள் வழியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் செபத்தில் ஆன்மீக முறையில் ஒன்றித்திருக்க வேண்டும் என அழைக்கப்பட்டுள்ளனர்.

ஏறத்தாழ ஒரு மணி நேரம் நடைபெறும் இச்செப நிகழ்வில், முதலில் இறைவார்த்தை வாசிக்கப்படுகிறது. மன்றாட்டுக்கள் இறைவனை நோக்கி எழுப்பப்படும், திருநற்கருணை ஆராதனை நடைபெறுகிறது, இந்நிகழ்வின் இறுதியில் 'ஊர்பி எத் ஓர்பி (Urbi et Orbi)' சிறப்பு ஆசீர் வழபங்கப்படுகிறது. இதனைப் பெறுகிறவர்களுக்குப் பரிபூரணபலனும் கிடைக்கிறது.

அன்னை மரியா, புதுமை திருச்சிலுவை

இச்செப நிகழ்வின்போது, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் மையக் கதவுக்குமுன், உரோம் மக்களுக்கு சுகமளிக்கும் (Salus Populi Romani) அன்னை மரியா திருப்படமும், புனித மர்ச்செல்லோ (San Marcello) ஆலயத்தில் வணங்கப்பட்டுவரும் புதுமை திருச்சிலுவையும் வைக்கப்பட்டிருக்கும் என்று திருப்பீட தகவல் தொடர்பகம் அறிவித்துள்ளது.

Salus Populi Romani அன்னை மரியா திருப்படம், உரோம் மேரி மேஜர் அன்னை மரியா பெருங்கோவிலில் வணங்கப்பட்டு வருகிறது. புதுமை திருச்சிலுவை, உரோம், Via del Corso சாலையில், மரியின் ஊழியர் ஆண் துறவு சபையினர் பராமரித்துவரும் புனித மர்ச்செல்லோ ஆலயத்தில் வணங்கப்பட்டு வருகிறது.

சிறப்பு 'ஊர்பி எத் ஓர்பி (Urbi et Orbi)' ஆசீர்

இச்செப நிகழ்வில் இறைவார்த்தை வாசிக்கப்பட்ட பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தியானச் சிந்தனையை வழங்குகிறார். பின்னர், பெருங்கோவிலுக்கு முன்புறமுள்ள பீடத்தில், கதிர்பாத்திரத்தில் திருநற்கருணை கொண்டுவந்து வைக்கப்படுகிறது. பின்னர் விசுவாசிகள் மன்றாட்டு செபிக்கப்படுகிறது. அதன்பின்னர் வத்திக்கான் பெருங்கோவிலின் அதிபர் கர்தினால் ஆஞ்சலோ கொமாஸ்த்ரி அவர்கள், பரிபூரண பலன் பெறுவது பற்றி அறிவிப்பார். பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருநற்கருணையில் எழுந்தருளியிருக்கும் இயேசுவால் 'ஊர்பி எத் ஓர்பி (Urbi et Orbi)' சிறப்பு ஆசீரை வழங்குவார்.

இந்த சிறப்பு நிகழ்வை நேரடி ஒளிபரப்பில் காண விழைவோர், பின்வரும் இணையதள தொடர்பைச் சொடுக்கவும்: https://www.youtube.com/watch?v=ojGaZWm93WU

மார்ச் 27, இவ்வெள்ளி செப நிகழ்வு குறித்து, திருத்தந்தை மார்ச் 22, ஞாயிறு மூவேளை செப உரையின்போது அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றுக்கிருமி பரவலைத் தடை செய்யவும், அந்நோய்க்குப் பலியானவர்கள், அந்நோயாளிகள் மற்றும் அவர்களைப் பராமரிக்கும் எல்லாருக்காகவும் திருத்தந்தை தொடர்ந்து செபித்து வருகிறார். மார்ச் 25, இப்புதன்கிழமை உரோம் நேரம் பகல் 12 மணிக்கு அவர் செபித்த, இயேசு கற்றுக்கொடுத்த, இறைத்தந்தையை நோக்கிய செபத்தில், அனைத்து கிறிஸ்தவர்களும் இணையுமாறு அழைப்பு விடுத்தார். அவரின் விண்ணப்பத்தை ஏற்று, அனைத்து கிறிஸ்தவர்களும், அன்று, திருத்தந்தையுடன் இணைந்து செபித்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 March 2020, 10:20