குடும்பங்களுடன் திருத்தந்தை (கோப்பு படம்) குடும்பங்களுடன் திருத்தந்தை (கோப்பு படம்) 

தவக்காலம், குடும்ப உறவுகள் குறித்து டுவிட்டர் செய்திகள்

வீட்டிற்குள்ளேயே அடைபட்டிருக்கும் நிலை, குடும்பத்தில், சீரிய பாசப்பிணைப்பையும், படைப்பாற்றலையும் கண்டுகொள்ள சிறந்த வாய்ப்பு - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பெரும்பாலான மக்கள் இன்று வீட்டிற்குள்ளேயே அடைபட்டிருக்கும் நிலையில், அன்பின் சிறந்த வெளிப்பாடுகளை குடும்பங்களில் கண்டுகொள்ள இதுவே சிறந்த நேரம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 16, இத்திங்களன்று வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

"இன்றையச் சூழலில், அன்பின் புதிய பரிமாணங்களைக் கண்டுகொள்ள இறைவன், குடும்பங்களுக்கு உதவுவாராக. குடும்பத்தில் சீரிய பாசப்பிணைப்பையும், படைப்பாற்றலையும் கண்டுகொள்ள இது சிறந்த வாய்ப்பு. குடும்பங்களில் நிலவும் உறவுகள், நன்மைத்தனத்தை நோக்கி மலரட்டும் என அனைவரும் ஒன்றிணைந்து செபிப்போம்" என்ற சொற்கள் வழியே, திருத்தந்தை, தன் முதல் டுவிட்டர் செய்தியில் விண்ணப்பித்துள்ளார்.

இத்திங்களன்று திருத்தந்தை வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தியில், "கடவுள் எப்போதும் சாதாரண நிகழ்வுகளின் வழியே செயல்படுகிறார். ஆனால், உலகுசார்ந்த உணர்வுகளோ, ஆடம்பரம், வெளித்தோற்றம் ஆகியவற்றை நோக்கி நம்மை அழைத்துச் சென்று, வன்முறையில் முடிவடைகிறது" என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

மூன்றாவது டுவிட்டர் செய்தியில், "மனம் வருந்துங்கள், வாழ்வை மாற்றியமையுங்கள், ஏனெனில், புதிய வாழும் முறை துவங்கியுள்ளது. உங்களுக்கென நீங்கள் வாழ்ந்த காலம் முடிவுற்றது. கடவுளோடும், கடவுளுக்காகவும், பிறரோடும், பிறருக்காகவும், அன்போடும், அன்புக்காகவும் வாழவேண்டிய காலம் இது" என்ற செய்தியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பதிவு செய்திருந்தார்.

இதற்கிடையே, மார்ச் 15, இஞ்ஞாயிறன்று, மூன்று டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ள திருத்தந்தை, தன் முதல் டுவிட்டரில், பொதுமக்களுக்குரிய பணிகளில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்காகவும் செபிக்கும்படி விண்ணப்பித்துள்ளார்.

இரண்டாவது டுவிட்டரில், சமாரியப்பெண் தன் உண்மை நிலையை இயேசுவிடம் துணிவுடன் எடுத்துச் சொன்னதைக் கூறும் ஞாயிறு நற்செய்தி வாசகத்தைச் சுட்டிக்காட்டி, உண்மையில் செபிக்கும் அருளை இறைவனிடம் வேண்டுவோம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

வாழ்வுக்கும், அன்புக்கும் நம்முள் இருக்கும் தாகத்தை தணிக்கவல்ல வாழும் தண்ணீராம் இயேசுவின் மீதுள்ள பேரார்வத்தை வளர்க்கும் அருளுக்காக வேண்டுவோம் என்ற கருத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட மூன்றாவது டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 March 2020, 15:11