மாற்றுத்திறனாளி ஒருவருடன் திருத்தந்தை (கோப்பு படம்) மாற்றுத்திறனாளி ஒருவருடன் திருத்தந்தை (கோப்பு படம்) 

வருகிற வாரமும் சாந்தா மார்த்தா திருப்பலி நேரடி ஒளிபரப்பு

ஆண்டவரை நாம் தேடுவதற்கு முனைவதற்கு முன்னரே, அவர் நம்மைத் தேடுகிறார், நம்மைச் சந்திக்க வருகிறார் மற்றும், நம்மை அழைக்கிறார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமி உருவாக்கியுள்ள இந்நெருக்கடியான சூழலில், மார்ச் 15 இஞ்ஞாயிறன்றும், வருகிற வாரமும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நேரம் காலை ஏழு மணிக்கு, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றும் திருப்பலி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

அதோடு, மார்ச் 15 இஞ்ஞாயிறு, திருத்தந்தையின் மூவேளை செப உரையும், மார்ச் 18, வருகிற புதன் மறைக்கல்வியுரையும், தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

முதல் டுவிட்டர்

மார்ச் 14, இச்சனிக்கிழமை காலையில் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் வழங்கிய மறையுரையின் தொடர்ச்சியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியில், துன்பச் சூழலில் வாழ்கின்ற குடும்பங்களுக்காகச் செபிப்போம் என்று கூறியுள்ளார்.

நெருக்கடியான சூழல்களை எதிர்நோக்குகின்ற குடும்பங்களுக்காக, குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்காக இன்று இறைவேண்டல் செய்வோம். இக்குடும்பங்கள், இத்துன்ப நேரத்தில் தங்களின் மனஅமைதியை இழந்துவிடாதிருக்கவும், மனவலிமை மற்றும், மகிழ்வுடன் முன்னோக்கிச் செல்லவும் செபிப்போம் என்ற சொற்கள், திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஒவ்வொரு நாள் காலை ஏழு மணிக்கு நிறைவேற்றும் திருப்பலியை, நேரடி ஒளிபரப்பில் காண்பதற்கு உதவியாக, https://www.youtube.com/watch?v=4vzgg1-1mi0 யூடியூப் முகவரியையும், டுவிட்டர் செய்தியுடன் இணைத்து வழங்கியுள்ளார். 

2வது, 3வது டுவிட்டர் செய்திகள்

மேலும், #OmeliaSantaMarta என்ற ஹாஷ்டாக்குடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தியில், ஆண்டவர், காணாமற்போன மகன் உவமை வழியாக (லூக்.15,1-32), பிரச்சனை என்னவென்பதை நாம் புரிந்துகொள்ளச் செய்கிறார். அதாவது, வீடு என்ற உணர்வைப் பெறாமல் வீட்டில் வாழ்கையில், தந்தைமை, உடன்பிறந்த உணர்வு ஆகிய உறவை உணர முடியாது  என்பதை நாம் புரிந்துகொள்ளச் செய்கிறார் என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

மார்ச் 14, இச்சனிக்கிழமை காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், #Lent என்ற ஹாஷ்டாக்குடன் வெளியிட்ட மூன்றாவது டுவிட்டர் செய்தியில், ஆண்டவரை நாம் தேடுவதற்கு முனைவதற்குமுன்னரே, அவர் நம்மைத் தேடுகிறார், நம்மைச் சந்திக்க வருகிறார் மற்றும், நம்மை அழைக்கிறார் என்பதை அறிந்திருக்கிறோம். அவர் நமக்காக காத்திருக்கிறார் என நாம் அறிந்திருப்பதால் மகிழ்வோடு நம் பயணத்தைத் தொடங்குகிறோம் என்ற வார்த்தைகள் பதிவாகியிருந்தன.  

சந்திப்புகள்

மேலும், ஆயர்கள் பேராயத் தலைவர் கர்தினால் Marc Ouellet, கீழை வழிபாட்டுமுறை பேராயத் தலைவர் கர்தினால் Leonardo Sandri, மத்திய அமெரிக்க ஒருங்கமைப்பின் திருப்பீட பிரதிநிதி பேராயர் Santo Gangemi, சலேசிய அருள்சகோதரிகள் சபை தலைவர் அருள்சகோதரி Yvonne Reungoat, பணி ஓய்வுபெறும் வத்திக்கான் நூலக உதவித் தலைவர் Ambrogio M. Piazzoni ஆகியோரை, மார்ச் 14, இச்சனிக்கிழமை காலையில், சாந்தா மார்த்தா இல்லத்தில், தனித்தனியே சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 March 2020, 15:38