காணொளியில் உரையாற்றும் திருத்தந்தை காணொளியில் உரையாற்றும் திருத்தந்தை 

மூவேளை செபஉரை, மறைக்கல்வியுரை நேரடி ஒளிபரப்பு

வத்திக்கானில் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றப்படும் திருப்பலிகளில் விசுவாசிகள் பங்குபெறுவது, மார்ச் 15, ஞாயிறு வரை நிறுத்தப்பட்டுள்ளது

முக்கிய அறிவிப்பு

மேரி தெரேசா-வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமி  (COVID-19) நெருக்கடியை முன்னிட்டு, மக்களின் நலன்கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்திட்டங்கள், வரும் நாள்களில் மாற்றப்பட்டுள்ளது என்று, திருப்பீட தகவல் தொடர்பகம், மார்ச் 07, இச்சனிக்கிழமை பிற்பகலில் அறிவித்துள்ளது.  

மார்ச் 8, இஞ்ஞாயிறு திருத்தந்தையின் நண்பகல் மூவேளை செப உரை, வத்திக்கான் மாளிகையிலுள்ள நூலகத்தில் இடம்பெறும். அது, வத்திக்கான் மாளிகையின் ஜன்னல் வழியாக, புனித பேதுரு வளாகத்தில் இடம்பெறாது. திருத்தந்தையின் மூவேளை செப உரை மற்றும், செபம், வத்திக்கான் ஊடகத் துறையால், புனித பேதுரு வளாகத்திலுள்ள திரைகளில் நேரடி ஒளிபரப்பு (YouTube) செய்யப்படும். வத்திக்கான் ஊடகம் அந்த ஒலி-ஒளி செபத்தை விண்ணப்பிக்கும் ஊடகங்களுக்கும் வழங்கும்.

மார்ச் 11ம் தேதி புதன்கிழமை திருத்தந்தையின் பொது மறைக்கல்வியுரையும் இதே முறையில் இடம்பெறும்.

இவ்வாறு அறிவித்துள்ள திருப்பீட தகவல் தொடர்பகம், COVID-19 பரவும் ஆபத்தைத் தடுப்பதற்காக, இத்தாலிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன்பேரில், இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அறிவித்துள்ளது.

மேலும், வத்திக்கான் நாட்டின் நலவாழ்வுத்துறையின் ஆணைக்கு உட்பட்டு, வத்திக்கானில் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றப்படும் திருப்பலிகளில் விசுவாசிகள் பங்குபெறுவது, மார்ச் 15, ஞாயிறு வரை நிறுத்தப்பட்டுள்ளது என்றும், திருத்தந்தை திருப்பலியை தனியாக நிறைவேற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 March 2020, 15:55