திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

திருத்தந்தையின் காணொளிச் செய்தி: மனித உடன்பிறந்தநிலை

“ஓராண்டுக்குமுன் கையெழுத்திடப்பட்ட மனித உடன்பிறந்தநிலை பற்றிய ஏடு, மதங்கள் மற்றும், நன்மனம்கொண்ட மக்களுக்கு இடையேயுள்ள உரையாடலில் ஒரு புதிய பக்கத்தை எழுதியுள்ளது. நாம் சகோதரர் சகோதரிகளாக, வன்முறை வேண்டாம் எனச் சொல்வோம். அமைதி, வாழ்வு மற்றும், சமய சுதந்திரத்தை, ஒன்றுசேர்ந்து ஊக்குவிப்போம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

உலக அமைதிக்கு மனித உடன்பிறந்த நிலை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஏடு கையெழுத்திடப்பட்டதன் ஓராண்டு நிறைவு நிகழ்வுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காணொளிச் செய்தி ஒன்றை, பிப்ரவரி 4, இச்செவ்வாயன்று அனுப்பியுள்ளார்.

அபு தாபியில், இந்த ஏட்டின் முதலாமாண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொள்ளும் அனைவருக்கும், குறிப்பாக, மனித சமுதாயத்தில் மதம், நிறம், இனம் போன்ற பாகுபாடின்றி, ஏழைகள், நோயுற்றோர் மற்றும், நசுக்கப்படுவோருக்கு உதவிபுரியும் எல்லாருக்கும் தன் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

அரபு ஐக்கிய அமீரகம், மனித உடன்பிறந்த நிலையை ஊக்குவிப்பதற்கு, ஆபிரகாம் இல்லம் என்ற ஒரு நடவடிக்கையை முன்னெடுத்திருப்பதற்கு தன் பாராட்டுக்களைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ள திருத்தந்தை, மனித சமுதாயத்தின் நன்மைக்காக எடுக்கப்படும் எல்லா முயற்சிகளையும் எல்லாம்வல்ல இறைவன் ஆசீர்வதிக்குமாறும், மனித உடன்பிறந்த நிலைக்குரிய முயற்சிகளில் முன்னோக்கிச் செல்ல உதவுமாறும் செபிக்கின்றேன் என்றும் கூறியுள்ளார்.

2019ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி, அபுதாபியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், Al-Azhar இஸ்லாமிய தலைமைக்குரு Sheikh Ahmed el-Tayeb  அவர்களும், உலக அமைதிக்கு மனித உடன்பிறந்த நிலை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஏட்டில் கையெழுத்திட்டதன் ஓராண்டு நிறைவை முன்னிட்டு, இத்திங்கள் மற்றும் இச்செவ்வாயன்று அபு தாபியில் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

டுவிட்டர்

மேலும், இந்த ஓராண்டு நிறைவைமுன்னிட்டு, இச்செவ்வாயன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் “ஓராண்டுக்குமுன் கையெழுத்திடப்பட்ட மனித உடன்பிறந்தநிலை பற்றிய ஏடு, மதங்கள் மற்றும், நன்மனம்கொண்ட மக்களுக்கு இடையேயுள்ள உரையாடலில் ஒரு புதிய பக்கத்தை எழுதியுள்ளது. நாம் சகோதரர் சகோதரிகளாக, வன்முறை வேண்டாம் எனச் சொல்வோம். அமைதி, வாழ்வு மற்றும், சமய சுதந்திரத்தை, ஒன்றுசேர்ந்து ஊக்குவிப்போம்”என்ற சொற்கள் பதிவாகியுள்ளன.  

மனித உடன்பிறந்தநிலை ஏடு வெளியிடப்பட்ட ஓராண்டுக்குப்பின்

அக்கூட்டத்தில் திருப்பீட சமூகத் தொடர்புத்துறைத் தலைவர் பவுலோ ருஃபீனி அவர்கள், திருப்பீடத்தின் சார்பில் கலந்துகொண்டு ஆற்றிய உரையில், உலகளாவிய மனித உடன்பிறந்தநிலையை அமைப்பதில், சமூகத் தொடர்புகள் மிகவும் முக்கிய பங்காற்றுகின்றன என்று கூறினார்.

மனித உடன்பிறந்தநிலையை எட்டுவதற்கு, எல்லாத் தளங்களிலும் தீர்மானம் எடுப்பவர்கள் மற்றும், சமயத் தலைவர்களின் ஆதரவு மிகவும் தேவைப்படுகின்றது, அதேநேரம் ஊடகத்துறையும் அவசியம் என்று, இஸ்லாமிய தலைமைக்குருவின் முன்னாள் ஆலோசகர், நீதிபதி Mohamed Abdel Salam அவர்கள், இக்கூட்டத்தில் உரையாற்றினார்.

இதற்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மத வேறுபாடின்றி, பல்வேறு புலம்பெயர்ந்த குடும்பங்களை வரவேற்றது என்றும், Mohamed Abdel Salam அவர்கள் கூறினார்.

மேலும், அக்கூட்டத்தில் உரையாற்றிய அருள்பணி Yoannis Gaid அவர்கள், மனித உடன்பிறந்தநிலை இலக்கை எட்டுவதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்றும், எல்லா மதத்தினரும், கடவுளில் தங்களின் தொடக்கத்தைக் காண்பதால், இந்த ஏடு கடவுளின் விருப்பத்தில் வேரூன்றியுள்ளது என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 February 2020, 15:34