மால்தா திருத்தூதுப் பயணத்திற்குரிய இலச்சினை மால்தா திருத்தூதுப் பயணத்திற்குரிய இலச்சினை 

மால்தா நாட்டின் திருத்தூதுப் பயணத்திற்குரிய இலச்சினை

விரிந்த இரு கரங்கள் ஒரு கப்பல் வடிவில் அமைக்கப்பட்டிருப்பதையும், அவ்விரு கரங்களும் ஒரு சிலுவையை ஏந்துவதற்கு தயாராக இருப்பதையும் குறிக்கும்வண்ணம் மால்தா திருத்தூதுப்பயணத்தின் இலச்சினை அமைக்கப்பட்டுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வாண்டு மே 31ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மால்தா நாட்டில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத்திற்குரிய இலச்சினையை, அந்நாட்டு தலத்திருஅவை வெளியிட்டுள்ளது.

விரிந்த இரு கரங்கள் ஒரு கப்பல் வடிவில் அமைக்கப்பட்டிருப்பதையும், அவ்விரு கரங்களும் ஒரு சிலுவையை ஏந்துவதற்கு தயாராக இருப்பதையும் குறிக்கும்வண்ணம் இந்த இலச்சினை அமைக்கப்பட்டுள்ளது.

திருத்தூதர் பவுல் அடியார், மேற்கொண்ட கப்பல் பயணத்தின்போது, புயலிலிருந்து காக்கப்பட்டு, மால்தா தீவில் ஒதுங்கியபோது, "அவர்கள் எங்களிடம் மிகுந்த மனித நேயத்துடன் நடந்துகொண்டனர்" (தி.ப.28:2) என்று திருத்தூதர் பணிகள் நூலில் கூறப்பட்டுள்ள சொற்கள், இந்த திருத்தூதுப் பயணத்தின் விருது வாக்காக அமைந்துள்ளது.

திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம், மால்தா போன்ற சிறிய தீவுக்கு ஒரு பெரும் வரம் என்று கூறிய மால்தா பேராயர் Charles Scicluna அவர்கள், திருத்தந்தையின் வரவு, தங்கள் சமுதாயத்தில் நிலவும் பல்வேறு காயங்களை குணமாக்கும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.

மேலும், கடலில் தத்தளிக்கும் புலம்பெயர்ந்தோர் பலருக்கு மால்தா நாடு, புகலிடம் அளிப்பதில் தன் அர்ப்பணத்தை, இந்தத் திருத்தூதுப் பயணத்தின் வழியே மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும் என்று, பேராயர் Scicluna அவர்கள் அவர்கள் எடுத்துரைத்தார்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன், திருத்தூதர் பவுல் அடியாரை வரவேற்று விருந்தோம்பிய மால்தா மக்கள், தற்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்க காத்திருக்கின்றனர் என்று, Gozo தீவின் அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் Mario Grech அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 February 2020, 15:22