வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி 010220 வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி 010220 

துறவற வாழ்வு என்பது, இறைவனின் அன்புக் கொடை

அருளையும், நமக்கு அடுத்திருப்பவரையும் நோக்கவும், புதிய நம்பிக்கைகளை கொண்டிருக்கவும் உதவும் புதியதொரு கண்ணோட்டத்தை இறைவனிடம் வேண்டுவோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

அர்ப்பண வாழ்வுக்காக துறவறத்தார் இறைவனுக்கு நன்றியுரைக்கும் அதேவேளையில், அருளையும், நமக்கு அடுத்திருப்பவரையும் நோக்கவும், புதிய நம்பிக்கைகளை கொண்டிருக்கவும் உதவும் புதியதொரு கண்ணோட்டத்தை இறைவனிடம் வேண்டுவோம் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவை, கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த திருவிழாவையொட்டி, துறவறத்தார் நாளையும் சிறப்பித்து, பிப்ரவரி 1, சனிக்கிழமை மாலை, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞாயிறு நற்செய்தி வாசகத்தில் வரும் சிமியோனை ஓர் எடுத்துக்காட்டாக முன்வைத்தார்.

குழந்தை இயேசுவில் மீட்பரைக் கண்ட சிமியோனைப்போல், துறவறத்தாரும், வாழ்வில் எது முக்கியம் என்பதை அடையாளம் கண்டு, அதைப் பெறுவதற்கென, உலக இன்பங்களை துறந்து வந்தவர்கள் என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

துறவறத்தார், ஒவ்வொரு நாளும், தங்களை உற்றுநோக்கி, அனைத்தும் இறைவனின் கொடை, இறைவனின் அருள் என கூறுபவர்களாக இருக்கவேண்டும், ஏனெனில் துறவற வாழ்வு என்பது, இறைவனின் அன்புக் கொடை என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

நமக்குக் கிட்டியுள்ள அருளை நாம் எவ்வாறு நோக்குகிறோம் என்பதே துவக்க நிலை என்பதை துறவறத்தாரிடம் எடுத்துரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துறவற வாழ்வை, உலகின் வழிகளில் நோக்கும் சோதனைகளை கைவிடவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

உலகின் பார்வையில் துறவற வாழ்வை நாம் நோக்கி அதன் வழி செல்லும்போது, அது முன்னோக்கிச் செல்லாமல், தேங்கிப்போன ஒரு நிலையை அடைந்து விடும் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

ஏழ்மை, கற்புடைமை, கீழ்ப்படிதல் என்பவை குறித்தும் எடுத்துரைத்து, சிமியோனைப்போல் பணியாளனாக தன்னை அடையாளம் கண்டு அதன்படி செயல்படவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை, துயரத்தில் இருப்போரையும் அருகில் கொண்டுவரும்படியாக, பிறருக்காக பணியாற்றவேண்டிய தேவையை வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 February 2020, 15:23