இத்தாலியில் சிறப்பிக்கப்பட்ட 'வாழ்வின் நாள்' இத்தாலியில் சிறப்பிக்கப்பட்ட 'வாழ்வின் நாள்' 

கருவில் உருவானது முதல் இயற்கையான மரணம் வரை வாழ்வு பாதுகாக்கப்பட

தொழில் நுட்பத்திற்காகவோ, பொருளாதாரக் காரணங்களுக்காகவோ, அல்லது, வேறு எந்த ஒரு காரணத்திற்காகவும், மனித மாண்பு மீறப்படுவது அனுமதிக்கப்படக்கூடாது - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

பிப்ரவரி 2, இஞ்ஞாயிறன்று, இத்தாலியில் சிறப்பிக்கப்பட்ட 'வாழ்வின் நாள்' குறித்து, தன் மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'வாழ்விற்கு கதவுகளைத் திறவுங்கள்' என்ற தலைப்புடன் சிறப்பிக்கப்பட்ட இந்நாளில், கருவில் உருவானது முதல் இயற்கையான மரணம் வரை வாழ்வு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அர்ப்பணத்தை புதுப்பிக்க, இத்தாலிய ஆயர்களுடன் தானும் இணைவதாக தெரிவித்தார் திருத்தந்தை.

தொழில் நுட்பத்திற்காகவோ, பொருளாதாரக் காரணங்களுக்காகவோ, அல்லது, வேறு எந்த ஒரு காரணத்திற்காகவும், மனித மாண்பு மீறப்படுவது அனுமதிக்கப்படக்கூடாது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாண்பு மீறப்படும்போது, அதை எதிர்த்து போராடவேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

மனித மாண்பிற்குரிய நம் போராட்டத்தில், பொறுப்புணர்வுடன் கூடிய உடன்பிறந்த உணர்வின் புதிய வகை நிலைகளுக்கு நம் உள்ளக் கதவுகளைத் திறக்கவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையில் இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட உலக அர்ப்பண வாழ்வு நாள் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, அர்ப்பண வாழ்வில் ஈடுபட்டுள்ளோருக்காக செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 February 2020, 12:40