இறை வார்த்தை அடங்கிய நூலை உயர்த்திப்பிடிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இறை வார்த்தை அடங்கிய நூலை உயர்த்திப்பிடிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

இறைவார்த்தை ஞாயிறன்று புனித திமொத்தேயுவின் திருப்பொருள்கள்

சனவரி 26, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் "முதல் இறைவார்த்தை ஞாயிறு" திருப்பலியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவிலில் நிறைவேற்றுவார்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஆண்டின் பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறாகிய, சனவரி 26, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் "முதல் இறைவார்த்தை ஞாயிறு" திருப்பலியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவிலில் நிறைவேற்றுவார்.

திருத்தந்தை நிறைவேற்றும் இத்திருப்பலியை முன்னிட்டு, புனித திமொத்தேயுவின்  திருப்பொருள்கள், வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் வைக்கப்படும்.

இச்சனிக்கிழமையன்று நிறைவு பெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரத்தில், உரோம் புனித பவுல் பசிலிக்காவில், இத்திருப்பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. இப்பசிலிக்காவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு, கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரத்தின் நிறைவு திருவழிபாட்டை தலைமையேற்று நிறைவேற்றுகிறார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பின் அடையாளமாக, குறிப்பாக, ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் மற்றும் கத்தோலிக்கர் மத்தியில், இவ்வாறு நோக்கப்படும் புனித திமொத்தேயு, புனித பவுலடிகளாரால், என் அன்புக்குரிய சீடர் என அழைக்கப்பட்டவர்.

1945ம் ஆண்டில், இத்தாலியின் தெர்மோலி நகர் பேராலயம் சீரமைக்கப்பட்டபோது, அங்கு புனித திமொத்தேயுவின் திருப்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பளிங்கு கல்லறைக் கல்லால் மூடப்பட்டிருந்த இப்பொருள்களின்மேல், “1239ம் ஆண்டவரின் ஆண்டில் – இங்கே, பேறுபெற்ற திருத்தூதரின் பேறுபெற்ற சீடர் திமொத்தேயுவின் உடல் அமைதியில் உறங்குகிறது” என பொறிக்கப்பட்டிருந்தது.

டுவிட்டர் செய்தி

மேலும், இறைவார்த்தை ஞாயிறை மையப்படுத்தி, சனவரி 25, இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியில், “விவிலியம் கடவுளுக்கும், மனித சமுதாயத்திற்கும் இடையே நிலவும் மாபெரும் அன்புக் கடிதம் என்றும், அதன் மையத்தில் இருப்பவர் இயேசு, அவரின் சொந்த கதை, கடவுள் நம்மீதும், நாம் அவர் மீதும் வைத்துள்ள அன்பை நிறைவுக்குக் கொணர்கிறது” என்ற சொற்களை, பதிவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 January 2020, 15:46