ஆஷ்விட்ஸ் நாத்சி வதைமுகாமில் செபிக்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ் ஆஷ்விட்ஸ் நாத்சி வதைமுகாமில் செபிக்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்  

கடந்த கால நினைவுகளின் தொடர்ச்சி, வருங்காலம்

திருத்தந்தை : நம்மருகே இயேசு இருக்கிறார் என்பதை உணர்த்தும் அன்புக் கடிதமாக இருக்கும் இறைவார்த்தைக்கு நம் வாழ்வில் இடமளிப்போம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

நாத்சி வதைப்போர் முகாமிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் குறித்து இத்திங்களன்று டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆஷ்விட்ஸ் (Auschwitz) நாத்சி வதைமுகாமில் சிறைப்பட்டோர் விடுவிக்கப்பட்டதன் 75ம் ஆண்டு இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

"நாம் நம் நினைவுகளைத் தொலைத்துவிட்டால், நமது எதிர்காலத்தை அழித்துவிடுவோம். யூத இனப்படுகொலை என்ற நினைவாக, 75 ஆண்டுகளுக்கு முன் மனிதகுலத்திற்கு நிகழ்ந்த சொல்லொண்ணா கொடுமை, நாம் அமைதி காத்து, நினைவுகூர்வதற்கு ஓர் அழைப்பாக இருக்கட்டும். இதை நாம் செய்யவேண்டிய அவசியம் உள்ளது, இல்லையேல், நாம் அக்கறையற்றவர்களாகிவிடுவோம்" என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றுள்ளன.

மேலும், சனவரி 26, இஞ்ஞாயிறன்று திருஅவையில் முதல்முறையாகச் சிறப்பிக்கப்பட்ட இறைவார்த்தை ஞாயிறையொட்டி, நான்கு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம்மருகே இயேசு இருக்கிறார் என்பதை உணர்த்தும் அன்பு கடிதமாக இறைவார்த்தை உள்ளது, என தன் முதல் டுவிட்டரில் கூறும் திருத்தந்தை, இறைவார்த்தைக்கு நம் வாழ்வில் இடமளிப்போம் என தன் இரண்டாம் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு விடயங்கள் குறித்துப் பேசும் வார்த்தைகளில், வாழ்வைப் பற்றி பேசுவது  இறைவார்த்தையே, என தன் மூன்றாவது டுவிட்டரிலும், சுயநலங்களிலிருந்து விடுவித்து, நமக்கு, ஆறுதலையும் ஊக்கத்தையும் தருவது இறைவார்த்தை என, தனது நான்காவது டுவிட்டரிலும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 January 2020, 15:26