பெரிய ஓவியம் ஒன்றை திருத்தந்தைக்கு பரிசாக வழங்கிய காங்கோ சனநாயக குடியரசின் அரசுத்தலைவர்  பெரிய ஓவியம் ஒன்றை திருத்தந்தைக்கு பரிசாக வழங்கிய காங்கோ சனநாயக குடியரசின் அரசுத்தலைவர்  

காங்கோவில் அமைதி நிலவ திருத்தந்தை செபிக்குமாறு..

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மதங்களிடையே உரையாடலை ஊக்குவித்து வருவதற்கு நன்றி தெரிவித்தார், காங்கோ அரசுத்தலைவர் Félix Tshilombo

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

காங்கோ சனநாயக குடியரசின் அரசுத்தலைவர் Félix Antoine Tshisekedi Tshilombo அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, சனவரி 17, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் ஏறத்தாழ இருபது நிமிடங்கள் தனியே சந்தித்து, கலந்துரையாடினார்.

இச்சந்திப்பிற்குப்பின், காங்கோவின் கிழக்குப் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட மற்றும், கண்ணீரோடு வானத்தை நோக்கிக்கொண்டிருக்கும், ஒரு பெண்ணின் உருவம்பொறித்த பெரிய ஓவியம் ஒன்றை திருத்தந்தைக்கு பரிசாக வழங்கி, அந்நாட்டில் மீண்டும் அமைதி திரும்ப திருத்தந்தை செபிக்குமாறு கேட்டுக்கொண்டார், அரசுத்தலைவர் Félix Antoine. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மதங்களிடையே உரையாடலை ஊக்குவித்து வருவதற்கு தன் நன்றியையும் தெரிவித்தார், காங்கோ அரசுத்தலைவர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், காங்கோ அரசுத்தலைவருக்கு, அமைதியைக் குறிக்கும் ஒரு பதக்கத்தை அளித்து, நீதியின் அடிப்படையில், ஒருமைப்பாடு மற்றும், அமைதி நிறைந்த ஓர் உலகு உருவாக்கப்பட வேண்டுமென்ற தன் ஆவலை வெளியிட்டார்.

காங்கோ அரசுத்தலைவர் அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்தபின், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களையும் சந்தித்துப் பேசினார்.

திருப்பீடத்தில் காங்கோ அரசுத்தலைவர்

இச்சந்திப்புகள் குறித்து அறிக்கை வெளியிட்ட திருப்பீட செய்தித் தொடர்பகம், காங்கோ குடியரசிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் குறித்தும், பொதுநல விவகாரங்கள் குறித்து, இவ்விரு நாடுகளுக்கிடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை காங்கோ குடியரசு செயல்படுத்தும் முறை குறித்த திருப்தியும் பேசப்பட்டன என்று கூறியது.

காங்கோவின் தற்போதைய நிலைமை, குறிப்பாக, கிழக்குப் பகுதியில் தொடர்ந்து இடம்பெறும் ஆயுதம் மோதல்கள் மற்றும் எபோலா நுண்கிருமி பரவலால் மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் பற்றியும் தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

இறுதியில், தேசிய மற்றும், பன்னாட்டு அளவில், மனித மாண்பும், குடிமக்களின் நல்லிணக்க வாழ்வும் ஊக்குவிக்கப்படல், பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள புலம்பெயர்ந்தோர் விவகாரம் போன்றவையும் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியது.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 January 2020, 14:47