திருத்தந்தையுடன் அர்ஜென்டீனா நாட்டு புதிய அரசுத்தலைவர் Alberto Fernandez திருத்தந்தையுடன் அர்ஜென்டீனா நாட்டு புதிய அரசுத்தலைவர் Alberto Fernandez  

திருத்தந்தை, அர்ஜென்டீனா அரசுத்தலைவர் பெர்னான்டெஸ் சந்திப்பு

அர்ஜென்டீனா, தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார-நிதி நெருக்கடி, வறுமை, ஊழல், போதைப்பொருள் வர்த்தகம் போன்ற பிரச்சனைகள் களையப்பட வேண்டியதன் அவசியம் பற்றி திருத்தந்தை, அந்நாட்டு அரசுத்தலைவர் Fernandez அவர்களிடம் வலியுறுத்தினார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அர்ஜென்டீனா நாட்டு புதிய அரசுத்தலைவர் Alberto Fernandez அவர்கள், தன் துணைவியார் Fabiola Yáñez அவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, சனவரி 31, இவ்வெள்ளிக்கிழமை காலையில், திருப்பீடத்தின் Tronetto அறையில் ஏறத்தாழ 44 நிமிடங்கள் தனியே சந்தித்து, கலந்துரையாடினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தாயகமான அர்ஜென்டீனா நாட்டு வெளியுறவு அமைச்சர் Felipe Solá அவர்கள் தலைமையில், ஒரு பிரதிநிதி குழுவும், அரசுத்தலைவருடன் சென்று திருத்தந்தையை வாழ்த்தி ஆசீர்பெற்றது. 

இச்சந்திப்பின் இறுதியில், இறைவா உமக்கே புகழ் (Laudato si') என்ற திருமடலையும், அகமகிழ்ந்து களிகூருங்கள் (Gaudete ed exsultate) என்ற திருத்தூது ஊக்கவுரை மடலையும், உலகில், அனைவரும் அமைதி மற்றும், நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு அழைப்பு விடுக்கும், மனித உடன்பிறந்தநிலை பற்றிய ஏட்டையும், நீங்கள் அமைதியின் தூதர்களாக இருங்கள் என்று பொறிக்கப்பட்ட சிற்பத்தையும் அர்ஜென்டீனா அரசுத்தலைவர் பெர்னான்டெஸ் அவர்களுக்கு அன்பளிப்பாக அளித்தார் திருத்தந்தை.

கிறிஸ்து வாழ்கிறார் (Christus Vivit) என்ற ஏட்டை, அரசுத்தலைவரின் மகனிடம் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்சந்திப்பின் இறுதியில், புனித தாமஸ் மோரோ அவர்களின் செபத்தை திருத்தந்தை செபித்தார். அரசுத்தலைவரும், Granja Andar அமைப்பின் தோற்றம் பற்றிய ஓர் நினைவுச்சின்னத்தையும், ஒரு நாள்காட்டியையும் திருத்தந்தைக்கு அன்பளிப்பாக அளித்தார்.

மேலும், அரசுத்தலைவர் Alberto Fernandez அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்தபின், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீட செயலகத்தின் நேரடிப் பொதுச் செயலர் பேரருள்திரு Mirosław Wachowski அவர்களையும் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்புக்களில் திருப்பீடத்திற்கும், அர்ஜென்டீனா நாட்டிற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் பற்றிப் பேசிய இத்தலைவர்கள், அந்நாடு தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார-நிதி நெருக்கடி, வறுமை, ஊழல், போதைப்பொருள் வர்த்தகம் போன்ற பிரச்சனைகள் களையப்பட வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்தினர்.

சமுதாய வாழ்வு, எல்லாவற்றிற்கும் மேலாக, வாழ்வு, தாயின் வயிற்றில் கருவானது முதல் இயற்கையான மரணம் அடையும் வரை பாதுகாக்கப்பட வேண்டியது பற்றியும், அர்ஜென்டீனா திருஅவை, சமுதாயத்திற்கு, குறிப்பாக, நலிந்தவர்களுக்கு ஆற்றிவரும் பணிகள் பற்றியும், இச்சந்திப்புக்களில் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

இவ்வெள்ளி காலையில், வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலுக்கு கீழ்புறத்திலுள்ள திருத்தூதர் பேதுரு கல்லறை பீடத்தில், அர்ஜென்டீனா ஆயர் Marcelo Sanchez Sorondo அவர்கள், அரசுத்தலைவர் Fernandez அவர்களுக்கும், அவர்கள் தலைமையில் சென்ற குழுவினருக்கும் திருப்பலி நிறைவேற்றினார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 January 2020, 14:45