இந்திய சீரோ மலபார் திருஅவை தலைவர்களுடன் திருத்தந்தை இந்திய சீரோ மலபார் திருஅவை தலைவர்களுடன் திருத்தந்தை 

சீரோ மலபார் திருஅவைக்கு புதிய ஆயர்கள் நியமனம்

சீரோ மலபார் ஆயர்களின் மாமன்றம் தெரிவு செய்த இருவரின் நியமனங்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 15, இப்புதனன்று, தன் ஒப்புதலை வழங்கியுள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சனவரி 7ம் தேதி முதல் 15ம் தேதி முடிய கேரளாவின் கொச்சியில் நடைபெற்ற சீரோ மலபார் ஆயர்களின் மாமன்றம் தெரிவு செய்த இருவரின் நியமனங்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 15, இப்புதனன்று, தன் ஒப்புதலை வழங்கியுள்ளார்.

காஞ்சிரப்பள்ளி மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றிவந்த மேத்யூ அரக்கல் (Mathew Arackal) அவர்கள் பணிஓய்வு பெறுவதற்கு அளித்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட ஆயர்களின் மாமன்றம், இதுவரை, அம்மறைமாவட்டத்தின் துணை ஆயராகப் பணியாற்றிவந்த ஆயர் ஜோஸ் புலிக்கல் (Jose Pulickal) அவர்களை, அப்பொறுப்பில்  நியமனம் செய்துள்ளதற்கு, திருத்தந்தை ஒப்புதல் வழங்கினார்.

அத்துடன், பாலக்காடு மறைமாவட்டத்தில் பணியாற்றிவந்த அருள்பணி பீட்டர் கொச்சுப்புரக்கல் (Peter Kochupuruckal) அவர்களை, ஆயர்களின் மாமன்றம், அம்மறைமாவட்டத்தின் துணை ஆயராக, நியமனம் செய்துள்ளதற்கு, திருத்தந்தை ஒப்புதல் அளித்துள்ளார்.

1964ம் ஆண்டு கேரளாவில் பிறந்து, தன் 27வது வயதில் அருள்பணியாளராகவும், 52வது வயதில், ஆயராகவும் அருள்பொழிவு பெற்ற ஆயர் ஜோஸ் புலிக்கல் அவர்கள், விவிலிய இறையியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

1964ம் ஆண்டு பிறந்த பீட்டர் கொச்சுப்புரக்கல் அவர்கள், 17வது வயதில் குருமடத்தில் இணைந்து, 26வது வயதில் அருள்பணியாளராக திருப்பொழிவு பெற்றார்.

கீழைவழிபாட்டு முறை திருஅவையின் சட்டங்களைப் பயில்வதற்கு, 2000மாம் ஆண்டு, உரோம் நகர் சென்ற கொச்சுப்புரக்கல் அவர்கள், இத்துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 January 2020, 15:07