உயிர் காக்கும் மேலுடை மாட்டப்பட்ட சிலுவையை, வத்திக்கானில் உள்ள Belvedere தாழ்வாரத்தில் திருத்தந்தை நிறுவினார். உயிர் காக்கும் மேலுடை மாட்டப்பட்ட சிலுவையை, வத்திக்கானில் உள்ள Belvedere தாழ்வாரத்தில் திருத்தந்தை நிறுவினார். 

லெஸ்போஸ் முகாம் புலம்பெயர்ந்தோரை வரவேற்ற திருத்தந்தை

தன்னிடம் வழங்கப்பட்ட உயிர் காக்கும் மேலுடையை ஒரு சிலுவையில் மாட்டி, அச்சிலுவையை, வத்திக்கானில் உள்ள Belvedere தாழ்வாரத்தில், புலம்பெயர்ந்தோர் அடையும் துன்பங்களுக்கு ஒரு நினைவுச் சின்னமாக திருத்தந்தை நிறுவினார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகில் நிலவும் அநீதிகள், மக்களை, தங்கள் சொந்த நாட்டிலிருந்து குடிபெயர்வதற்கு கட்டாயப்படுத்துகின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியில் குடியேறியிருக்கும் புலம்பெயர்ந்தோரிடம், டிசம்பர் 19, இவ்வியாழனன்று கூறினார்.

லெஸ்போஸ் தீவிலிருந்து வத்திக்கானுக்கு...

லெஸ்போஸ் தீவின் முகாமில் தங்கியிருந்த புலம்பெயர்ந்தோரை இத்தாலியில் குடியமர்த்த திருப்பீடம் மேற்கொண்ட முயற்சியின் பயனாக, உரோம் நகருக்கு அண்மையில் வந்து சேர்ந்தவர்களை, வத்திக்கானில் அமைந்துள்ள Belvedere தாழ்வாரத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்து, அவர்களை வரவேற்றார்.

நீர்ப்பரப்பில் பயணம் செய்வோர், நீரில் மூழ்காமல் இருக்க அணியப்படும் உயிர் காக்கும் மேலுடை ஒன்று, இந்த வரவேற்பின் துவக்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் நினைவுப்பொருளாக வழங்கப்பட்டது.

தன்னிடம் வழங்கப்பட்ட இந்த உயிர் காக்கும் மேலுடை, இவ்வாண்டு ஜூலை மாதத்தில் மத்தியதரைக் கடலில் உயிரிழந்தவர் ஒருவர் அணிந்திருந்த மேலுடை என்று கூறிய திருத்தந்தை, இது, தன்னை வந்தடைந்துள்ள இரண்டாவது நினைவுப் பொருள் என்று கூறினார்.

சிலுவை வடிவில், உயிர் காக்கும் மேலுடை

உயிர் காக்கும் இந்த மேலுடை, சிலுவை வடிவில் இருப்பதை சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலுவையில் தன்னுயிரை வழங்கி, இவ்வுலகிற்கு மீட்பைக் கொணர்ந்த இயேசு, நமக்கு புதுவாழ்வைத் தருவார் என்ற நம்பிக்கையை வழங்குகிறார் என்று கூறினார்.

தனக்கு வழங்கப்பட்ட முதல் நினைவுப்பொருளை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் ஒரு பகுதியான புலம்பெயர்ந்தோர் பிரிவுக்கு தான் வழங்கி, "இதோ நீங்கள் ஆற்றவேண்டிய பணியின் அடையாளம்" என்று கூறியதை, திருத்தந்தை நினைவுகூர்ந்தார்.

புலம்பெயர்ந்தோர் வழியே மனிதாபிமானம்

கடலில் தவிக்கும் புலம்பெயர்ந்தோரைக் காக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்போர், தாங்கள் காப்பாற்றும் மக்களின் வழியே, மனிதாபிமானத்தைக் கற்றுக்கொள்வதாகவும், காப்பாற்றும் பணி ஒவ்வொன்றின் வழியே, மனித சமுதாயம், ஒரு பெரிய குடும்பம் என்பதை தாங்கள் உணர்வதாகவும், தன்னிடம் கூறியுள்ளனர் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டார்.

லிபியா நாட்டில் புலம்பெயர்ந்தோர் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் நிலவும் கொடுமைகளைக் காட்டிலும், ஆபத்துக்கள் சூழ்ந்த கடல் பயணம் மேல் என்று அவர்கள் தீர்மானிக்கும்போது, இவ்வுலகில் நிலவும் அநீதிகளையும், கொடுமைகளையும் நாம் புரிந்துகொள்கிறோம் என்று திருத்தந்தை வருத்தத்துடன் எடுத்துரைத்தார்.

சிலுவையில் பொருத்தப்பட்ட உயிர்காக்கும் மேலுடை

தன் உரையின் இறுதியில், தன்னிடம் வழங்கப்பட்ட உயிர் காக்கும் மேலுடையை ஒரு சிலுவையில் மாட்டி, அச்சிலுவையை, வத்திக்கானில் உள்ள Belvedere தாழ்வாரத்தில், புலம்பெயர்ந்தோர் அடையும் துன்பங்களுக்கு ஒரு நினைவுச் சின்னமாக திருத்தந்தை நிறுவினார்.

உயிர் காக்கும் மேலுடை பொருத்தப்பட்ட சிலுவைக்கு கீழ், அனைவரையும் சில நொடிகள் அமைதியில் செபிக்குமாறு கூறிய திருத்தந்தை, இறுதியில் அனைவருக்கும் ஆசீர் வழங்கியபின், அங்கு வந்திருந்த ஒவ்வொரு குடும்பத்தையும் தனித்தனியே சந்தித்து வாழ்த்தினார்.

இந்நிகழ்வில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் புலம்பெயர்ந்தோர் பிரிவில் செயலராகப் பணியாற்றும் கர்தினால் Michael Czerny அவர்களும், திருத்தந்தையின் தர்மப்பணிகளுக்கு பொறுப்பாளரான கர்தினால் Konrad Krajewski அவர்களும் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 December 2019, 16:16