திருத்தந்தை பிரான்சிஸ், ஐ.நா. பொதுச் செயலர் கூட்டேரஸ்  திருத்தந்தை பிரான்சிஸ், ஐ.நா. பொதுச் செயலர் கூட்டேரஸ்  

மானுடத்தின் கடும்துயரங்களை உலகம் புறக்கணிக்கக் கூடாது

மனித சமுதாயத்தைத் புண்படுத்தியுள்ள பல காயங்கள், வேதனைகள், கடுந்துயரங்கள் ஆகியவற்றிற்கு உலகம் கண்களை மூடிக்கொண்டிருக்கக் கூடாது. அதேநேரம், அமைதியான உலகைக் கட்டியெழுப்ப, மனித சமுதாயம் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, டிசம்பர் 20, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் தனியே சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காணொளி வடிவில் வெளியிட்ட செய்தியில், இவ்வுலகம் எதிர்கொள்ளும் கடுமையான நெருக்கடிகள் அகற்றப்படுமாறு அழைப்பு விடுத்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காணொளி வடிவில் செய்தி வெளியிட்ட பின்னர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்களும், காணொளி வடிவில் செய்தி ஒன்றை வெளியிட்டார்.

திருத்தந்தையின் காணொளி செய்தி

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட காணொளி செய்தியில், மனித சமுதாயத்தைத் துன்புறுத்தியுள்ள பல காயங்கள், வேதனைகள், கடுந்துயரங்கள் ஆகியவற்றிற்கு உலகம் கண்களை மூடிக்கொண்டிருக்கக் கூடாது, மற்றும், அவற்றை வேறு கண்ணோட்டத்தில் நோக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

அதேநேரம், வாழ்விற்கு உண்மையாகவே தேவைப்படுவது அன்பு என்று சொல்லியுள்ள திருத்தந்தை, அமைதியான உலகைக் கட்டியெழுப்ப மனித சமுதாயம் ஒன்றிணைந்து, உழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இவ்வுலகில் நிலவும் அநீதிகள், சமத்துவமின்மை, பசி என்ற அவலம், வறுமை, தண்ணீர், உணவு, தேவையான நலவாழ்வு வசதிகள் போன்றவையின்றி இறக்கும் சிறார், ஆயுதப் போட்டிகள் போன்றவற்றிக்குமுன் நாம் பாராமுகமாய் இருக்க முடியாது என்று கூறியுள்ள திருத்தந்தை, போர்கள், வன்முறை, ஏழ்மை, காலநிலை மாற்றம் ஆகியவற்றால் தங்கள் நாடுகளைவிட்டு கட்டாயமாகப் புலம்பெயரும் மக்களையும் நினைவுகூர்ந்தார்.

சிறார்க்கெதிரான எல்லாவிதமான உரிமை மீறல்களை எதிர்ப்பதிலும், கருவில் வளரும் குழந்தை உட்பட மனித மாண்பு மற்றும், மனித வாழ்வுக்கெதிரான தாக்குதல்களை அகற்றுவதிலும் உலகம் ஒன்றிணையுமாறும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

உலகின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு மதத்தவர் சித்ரவதைக்கு உள்ளாகுகையில் நாம் அதனை வேறு விதமாய்ப் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது என்றுரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெறுப்பு, வன்முறை, நசுக்கப்படுதல், கண்மூடித்தனமான மதத் தீவிரவாதம், பயங்கரவாதம், மக்களை ஒதுக்குதல், மற்றும் நாட்டைவிட்டு வெளியேற்றுதல் ஆகியவற்றுக்கு, மதத்தைப் பயன்படுத்துதல், கடவுள்முன் அழுகுரல் எழுப்புகின்றது என்று கூறியுள்ளார்.    

அதேநேரம், மனிதாபிமானம் நிறைந்த மற்றும், நீதியான உலகை அமைப்பதற்கு, தங்கள் வாழ்வை தன்னார்வத்துடன் அர்ப்பணித்துள்ள பல நன்மனங்களுக்கு நன்றி தெரிவிப்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் காணொளியில் கூறியுள்ளனர்.

 

நாம் எல்லாரும் ஒரே மனிதக் குடும்பத்தின் உறுப்பினர்கள் என்பதை ஏற்று, கடவுள் நம்மிடம் ஒப்படைத்துள்ள நம் பூமியை, அடுத்தடுத்த தலைமுறைகளுக்குப் பாதுகாப்பாக ஒப்படைப்பதற்கும், ஒருங்கிணைந்த சூழலியல் உடனடித்தேவை மற்றும், அவசியமானது என்பதை உணர்ந்து, சூற்றுச்சூழலை மாசடையச் செய்யும் காற்று மாசுகேட்டைக் குறைப்பபடுதற்கும், நம்மை அர்ப்பணிப்போம், இதில் காலம்கடத்தாமல், உடனடியாக செயலில் இறங்குவோம் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

இன்றைய உலகில் இடம்பெறுவது குறித்து நாம் விழிப்படைய உதவுகின்ற மற்றும், அமைதியும், மனிதமும், நீதியான பண்பாடும் நிறைந்த உலகை ஒன்றிணைந்து  கட்டியெழுப்ப, நமக்கு அழைப்பு விடுக்கின்ற பல இளைஞர்களின் குரலுக்குச் செவிமடுப்போம் என்றும் அக்காணொளியில், திருத்தந்தை எடுத்துரைத்துள்ளார்.

இந்தச் சந்திப்பு, கிறிஸ்மஸ் காலத்தில் இடம்பெறுகின்றது, வாழ்வுக்கு இன்றியமையாதது அளப்பது அன்பு என்பதை, கிறிஸ்மஸ் தன் உண்மையான எளிமையில் எடுத்துரைத்துகின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் காணொளிச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் நிறுவனம் உருவாக்கப்பட்டதன் 75ம் ஆண்டு நிறைவையொட்டி இச்சந்திப்பு இடம்பெற்றது எனவும், அமைதிக்கென ஐ.நா. மேற்கொள்ளும் முயற்சிகளை திருப்பீடம் பாராட்டியது எனவும் திருப்பீட தகவல் தொடர்பகம் அறிவித்தது.

1945ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி ஐ.நா. நிறுவனம் செயல்படத் துவங்கியது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 December 2019, 16:04