கஜகஸ்தானில் விமான விபத்து கஜகஸ்தானில் விமான விபத்து 

கஜகஸ்தானில் விமான விபத்தில் இறந்தவர்களுக்கு செபம்

கஜகஸ்தானில் இடம்பெற்ற விமான விபத்து குறித்து, தனது அனுதாபங்களையும், செபங்களையும் தெரிவிக்கும் இரங்கல் தந்தியை, அந்நாட்டு சமயத் தலைவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் திருத்தந்தை அனுப்பியுள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நம் வாழ்வு பற்றி அமைதியில் சிந்தித்து சீர்தூக்கிப் பார்ப்பதன் முக்கியத்துவத்தை கிறிஸ்மஸ் குடில் நினைவுபடுத்துகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 27, இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

“கிறிஸ்மஸ் குடிலின்முன் நின்று தியானிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை, அக்குடில் நமக்கு நினைவுபடுத்துகின்றது. ஏனெனில் அவ்வாறு தியானிக்கும்போதுதான், நம் வாழ்வில் எது முக்கியம் என்பதை அறிந்து ஏற்க இயலும். மேலும், வெளியுலக சப்தத்திலிருந்து நாம் வெளிவந்தால் மட்டுமே, அமைதியில் உரையாடும் கடவுளின் குரலைக் கேட்பதற்கு நம்மையே நாம் திறந்து வைக்க இயலும்” என்ற சொற்களை, #Nativityscene ஹாஸ்டாக்குடன், தன் டுவிட்டர் செய்தியில் பதிவு செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 26, இப்புதன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 2,272 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 82 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

கஜகஸ்தான் விமான விபத்து

மேலும், கஜகஸ்தான் நாட்டின் அல்மட்டியில், டிசம்பர் 27, இவ்வெள்ளியன்று இடம்பெற்ற விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்கள் மற்றும், காயமுற்றோருடன் தன் ஒருமைப்பாட்டுணர்வையும், அனுதாபங்களையும், செபங்களையும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரில், கஜகஸ்தான் நாட்டிற்கு அனுப்பிய அனுதாப தந்திச் செய்தியில், இவ்விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா இறைவனில் நித்தியமாய் இளைப்பாற திருத்தந்தை செபிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

காயமுற்றோர் விரைவில் குணமடையவும், கஜகஸ்தான் நாட்டினர் எல்லார் மீதும், குறிப்பாக, மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளோர் மீதும் எல்லாம்வல்ல இறைவனின் வல்லமையும், அமைதியும் பொழியப்படவும் திருத்தந்தை செபிப்பதாகவும், அச்செய்தி கூறுகிறது.  

இவ்வெள்ளி உள்ளூர் நேரம் காலை 7.22 மணிக்கு, Bek விமான நிறுவனத்திற்குச் சொந்தமான Fokker 100 என்ற ஜெட் விமானம், 98 பேருடன் அல்மாட்டி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், அருகில் இருந்த இரண்டு அடுக்கு மாடி கட்டடம் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் ஆறு குழந்தைகள் உட்பட, குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும், 66 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்தில் கடுமையான பனிமூட்டம் இருந்ததாக செய்திகள் கூறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 December 2019, 15:21