பிலிப்பீன்ஸ் புலம் பெயர்ந்த மக்களுக்கு  திருப்பலி பிலிப்பீன்ஸ் புலம் பெயர்ந்த மக்களுக்கு திருப்பலி 

துன்புறுவோரிடையே அன்பின் கருவிகளாக நம்மை அர்ப்பணிப்போம்

திருத்தந்தை பிரான்சிஸ்: அரும்பெரும் செயல்களை ஆற்றிவரும் இறைவனின் கருணைநிறை அன்பின் கருவிகளாக, வறியோரிடையே நாம் செயலாற்ற உதவ வேண்டும் என இறைவனை வேண்டுவோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மீட்பு என்பது அனைவருக்கும் வழங்கப்படும் ஒன்று எனினும், ஏழைகள், எளிதில் பாதிப்புக்கு உள்ளாவோர், மற்றும், வாழ்வில் கடைநிலைக்குத் தள்ளப்பட்டோர் மீது, இறைவன் சிறப்புக் கவனம் செலுத்துகின்றார் என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் நகரில் வாழும், பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த புலம் பெயர்ந்த மக்களுக்கு இஞ்ஞாயிறு மாலையில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, அன்றும் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கும் இத்தகைய வறுமை மற்றும் அநியாய நிலைகளால் பாதிக்கப்பபட்டிருக்கும் மக்களிடையே அன்பின் கருவிகளாக நம்மை அர்ப்பணிப்போம் என கேட்டுக்கொண்டார்.

கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு 9 நாட்களுக்கு முன்னர், நவநாள் செப வழிபாட்டைத் துவக்கி நடத்திவரும் பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கர்களின் வழக்கமுறையையொட்டி, இஞ்ஞாயிறன்று, உரோம் நகரில் வாழும் பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கர்களுக்கு திருப்பலி நிறைவேற்றி நவநாள் முயற்சிகளைத் துவக்கிவைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அடக்கி ஒடுக்கப்பட்டோர், பசியால் வாடுவோர், சிறையிலிருப்போர், அயலார், அனாதைகள், விதவைகள் ஆகியோர், இறைவனின் தனிக் கவனத்திற்குரியவர்கள் என்பதை உணர்ந்து செயல்படுவோம் என கேட்டுக்கொண்டார்.

மனிதனாகப் பிறந்து, நம்மோடு இருந்து, அவ்விருப்பின் அடையாளமாக,  அரும்பெரும் செயல்களை ஆற்றிவரும் இறைவனின் கருணைநிறை அன்பின் கருவிகளாக, வறியோரிடையே நாம் செயலாற்ற உதவ வேண்டும் என இறைவனை வேண்டுவோம் என கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்துமஸ் பெருவிழாவுக்கு முந்தைய ஒன்பது நாட்களும் நவநாள் கொண்டாடும் பழக்கத்தை பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கர்கள் தற்போது தாங்கள் வாழும் அனைத்து நாடுகளுக்கும் எடுத்துச் சென்றுள்ளது குறித்தும், தன் மகிழ்ச்சியை வெளியிட்டார், திருத்தந்தை.

இறைவனின் இருப்பிலிருந்து கிட்டும் அருளை அனுபவிக்கத் தவறும், மற்றும், இறைவனின் அழகை சுவைக்க மறுக்கும் இக்கால சமுதாயத்தில், புளிக்காரமாக செயல்படவேண்டிய கத்தோலிக்கரின் கடமையையும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாங்கள் வாழும் சமுதாயத்தில், தங்கள் விசுவாசத்தை புளிக்காரமாக செயல்படுத்துமாறு, உரோம் நகர் வாழ் பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கர்களிடம் விண்ணப்பித்தார்.

தங்களிடமுள்ள ஆன்மீக மற்றும் கலாச்சாரச் செல்வங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அதேவேளை, மற்றவர்களின் அனுபவங்களையும் ஏற்று கற்றுக்கொள்ள முன்வர வேண்டும் எனவும், பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கரிடம் அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 December 2019, 15:37