கர்தினால் Prosper Grech மற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் சந்திப்பு - கோப்புப் படம் கர்தினால் Prosper Grech மற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் சந்திப்பு - கோப்புப் படம் 

கர்தினால் Grech மறைவு – திருத்தந்தையின் அனுதாபம்

புனித அகஸ்தீன் துறவுச் சபையைச் சேர்ந்த கர்தினால் Prosper Grech அவர்களின் மறைவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் ஆழந்த அனுதாபங்களை வெளியிட்டு தந்திச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மால்ட்டா நாட்டைச் சேர்ந்த கர்தினால் Prosper Grech அவர்கள், டிசம்பர் 30, இத்திங்கள் பிற்பகலில், தன் 94வது பிறந்தநாளை சிறப்பித்த சில நாள்களில் இறைவனடி சேர்ந்தார்.

புனித அகஸ்தீன் துறவுச் சபையைச் சேர்ந்த கர்தினால் Prosper Grech அவர்களின் மறைவையொட்டி, அச்சபையின் உலகத் தலைவர், அருள்பணி Alejandro Moral Antòn அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் ஆழந்த அனுதாபங்களை வெளியிட்டு தந்திச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

தன் தனிப்பட்ட துறவற வாழ்வை அர்ப்பண உணர்வுடன் நடத்தியதையும், இளையோரை உருவாக்குவதில் அவர் காட்டிய முழு ஈடுபாட்டையும் தான் அன்புடன் நினைவுகூர்வதாக, திருத்தந்தை, இத்தந்தியில் குறிப்பிட்டுள்ளார்.

1925ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி, மால்ட்டா நாட்டில் பிறந்த கர்தினால் Grech அவர்கள், 1943ம் ஆண்டு, புனித அகஸ்தீன் துறவு சபையில் இணைந்து, 1950ம் ஆண்டு, அருள்பணியாளராக திருப்பொழிவு பெற்றார்.

உரோம் நகரில், இயேசு சபையினரால் நடத்தப்படும் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக் கழகத்தில், இறையியலில் முனைவர் பட்டம் பெற்ற Grech அவர்கள், 1969ம் ஆண்டு, உரோம் நகரில் "Augustinianum" என்ற கல்வி நிறுவனத்தைத் துவக்கினார்.

1984ம் ஆண்டு, விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் ஆலோசகராகவும், 2003ம் ஆண்டு, பாப்பிறை இறையியல் கழகத்தின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்ட Grech அவர்களை, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2012ம் ஆண்டு, கர்தினாலாக உயர்த்தினார்.

2013ம் ஆண்டு நடைபெற்ற கர்தினால்களின் கான்கிளேவ் கூட்டத்திற்கு, கர்தினால் Grech அவர்கள், துவக்க மறையுரையை வழங்கினார்.

கர்தினால் Grech அவர்களின் அடக்கத் திருப்பலி, சனவரி 2ம் தேதி காலை 11.30 மணிக்கு புனித பேதுரு பெருங்கோவிலில் கர்தினால் Giovanni Battista Re அவர்களால் நிறைவேற்றப்படும் என்றும், திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் Grech அவர்களின் அடக்கச் சடங்கினை முன்னின்று நடத்துவார் என்றும் அறிவிக்கபப்ட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 December 2019, 13:25