திருத்தந்தையின் மூவேளை செப உரை 081219 திருத்தந்தையின் மூவேளை செப உரை 081219 

அமல அன்னை திருநாள் - திருத்தந்தையின் மூவேளை செப உரை

அன்னை மரியாவைப்போலவே, பிறரன்பு செயல்களையும், கருணை முயற்சிகளையும் எவ்வித விளம்பரமும் இன்றி முழு மனதுடன் ஆற்றவேண்டும் - திருத்தந்தையின் மூவேளை செப உரை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்து பிறப்பின் செய்தியை தனக்கு அறிவித்த தலைமை வானதூதர் கபிரியேலுக்கு அன்னை மரியா வழங்கிய பதிலுரையில் பணி மனப்பான்மை வெளிப்படுவதைக் காண்கிறோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு வழங்கிய மூவேளை செப உரையில் கூறினார்.

வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த 20,000த்திற்கும் அதிகமான திருப்பயணிகளுக்கு, டிசம்பர் 8, இஞ்ஞாயிறன்று, இத்தாலி நாட்டில் சிறப்பிக்கப்பட்ட, அமல அன்னை மரியா திருநாளையொட்டி வழங்கப்பட்டிருந்த நற்செய்தியை மையப்படுத்தி, நண்பகல் மூவேளை செப உரையை வழங்கினார், திருத்தந்தை.

கருணையின் செயல்கள், அமைதியாகவும், யாருடைய கவனத்தையும் ஈர்க்காமலும் நடைபெறுகின்றன என்பதை, தன் உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அடுத்திருப்பவருக்கு உதவி செய்வதில் நாம் காட்டும் ஆர்வமே, இறைவனுக்கு நாம் எவ்விதம் நம் உள்ளத்தைத் திறக்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது என்று கூறினார்.

அன்னை மரியாவைப்போலவே, பிறரன்பு செயல்களையும், கருணை முயற்சிகளையும் எவ்வித விளம்பரமும் இன்றி முழு மனதுடன் ஆற்றவேண்டும் என்று திருத்தந்தை தன் மூவேளை செப உரையில் அழைப்பு விடுத்தார்.

மேலும், கடந்த பல ஆண்டுகளாக கிழக்கு உக்ரைனில் இடம்பெற்றுவரும் மோதல்களுக்குத் தீர்வுகாணும் நோக்கத்துடன், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் மாநகரில், உக்ரைன், இரஷ்யா, பிரான்ஸ், மற்றும் ஜெர்மன் நாடுகளின் தலைவர்கள், இத்திங்களன்று சந்திக்கவிருப்பதை, தன் மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிழக்கு உக்ரைன் நாட்டின் அமைதிக்காக தான் சிறப்பான முறையில் செபிப்பதாக எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 December 2019, 16:38