புனிதர் நிலைக்கு உயர்த்தும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தில் பணியாற்றுவோருடன் திருத்தந்தை புனிதர் நிலைக்கு உயர்த்தும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தில் பணியாற்றுவோருடன் திருத்தந்தை  

புனிதர் நிலை வழிமுறைகள் பேராயத்தை பாராட்டியத் திருத்தந்தை

புனித வழிபாட்டு முறைகள் என்ற பெயரில் இயங்கிவந்த ஒரு பேராயத்தை, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், புனிதர் நிலை வழிமுறைகள் பேராயம், மற்றும், இறை வழிபாட்டு பேராயம் என்று 1969ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி உருவாக்கினார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்துவ மறையின் எடுத்துக்காட்டுகளாக வாழ்ந்தோரின் வாழ்வையும், ஆன்மீகத்தையும் ஆய்வு செய்து அவர்களை நம் வாழ்வின் வழிகாட்டிகளாக வழங்கிவரும் பேராயத்தின் பணிகளை தான் பாராட்டுவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

புனிதர் நிலைக்கு உயர்த்தும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயம், தன் 50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வேளையில், இந்தப் பேராயத்தில் பணியாற்றுவோர் மற்றும் உதவிகள் செய்வோர் அடங்கிய 230க்கும் அதிகமானோரை, டிசம்பர் 12, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, இப்பேராயம் ஆற்றிவரும் பணிகளுக்கு தன் நன்றியைத் தெரிவித்தார்.

புனித வழிபாட்டு முறைகள் என்ற பெயரில் இயங்கிவந்த ஒரு பேராயத்தை, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், புனிதர் நிலைக்கு உயர்த்தும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயம், மற்றும், இறை வழிபாட்டு பேராயம் என்று 1969ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி உருவாக்கினார் என்பதை, தன் உரையில் நினைவுகூர்ந்தார் திருத்தந்தை.

இறைவனின் வார்த்தையை தங்கள் வாழ்வின் ஆதரமாகக் கொண்டு வாழ்ந்த அருளாளர்களும், புனிதர்களும், அந்த இறைவார்த்தையை நம் வாழ்வுக்கு நெருக்கமாகக் கொணர்ந்துள்ளனர் என்பதை, உலகினர் அனைவருக்கும் உணர்த்தும்வண்ணம் இந்தப் பேராயம் உழைத்து வருகிறது என்பதை திருத்தந்தை எடுத்துரைத்தார்.

புனிதர்களின் வாழ்வைச் சூழ்ந்துள்ள ஐயங்களை நீக்கி, உண்மையை நிலைநாட்டுவதில், பொறுமையான ஆய்வுகள் தேவை என்பதை தன் உரையில் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்தகைய பொறுமையும், கடின உழைப்பும் இந்தப் பேராயத்தைச் சார்ந்த அனைவரிடமும் விளங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

திருமுழுக்கு பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவரும் புனிதத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார் என்பதை, உலகறியச் செய்வதற்கு உழைக்கும் பேராயத்தின் பணியாளர்கள் அனைவரையும் புனிதர்களின் அரசியான அன்னை மரியா பாதுகாக்க வேண்டும் என்ற ஆசீருடன் திருத்தந்தை தன் உரையை நிறைவு  செய்தார்.

1588ம் ஆண்டு, சனவரி 22ம் தேதி, திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட புனித வழிபாட்டு முறைகள் பேராயத்தை, 1969ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், புனிதர் நிலை வழிமுறைகள் பேராயம், மற்றும், இறை வழிபாட்டு பேராயம் என்று இரு பேராயங்களாகப் பிரித்தார்.

தற்போது புனிதர் நிலைக்கு உயர்த்தும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவராக, கர்தினால் ஆஞ்செலோ பெச்சு அவர்களும், செயலராக, பேராயர் மார்சேல்லோ பார்த்தோலுச்சி அவர்களும் பணியாற்றுகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 December 2019, 15:28