சாந்தா மார்த்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளை திருத்தந்தை சந்தித்த வேளையில்...... சாந்தா மார்த்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளை திருத்தந்தை சந்தித்த வேளையில்...... 

சாந்தா மார்த்தா மருத்துவமனை குழந்தைகளோடு திருத்தந்தை

குழந்தைகள் தன்னிடம் கொணர்ந்த நம்பிக்கை, அன்பு, அமைதி என்ற மூன்று பரிசுகளை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தைகளுடன் ஓர் உரையாடலை மேற்கொண்டார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

குழந்தைகளுக்கு மகிழ்வளிப்பது, உண்மையிலேயே ஓர் உன்னத நிகழ்வு என்றும், பெற்றோர், குழந்தைகளுடன் இணைந்து விளையாடும்போது, உண்மையில் சிறந்ததொரு செயலை ஆற்றுகின்றனர் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த குழந்தைகளிடமும், அவர்களது பெற்றோர் மற்றும், உதவியாளர்களிடமும் கூறினார்.

சாந்தா மார்த்தா மருத்துவமனை குழந்தைகளுடன்...

சாந்தா மார்த்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 300 குழந்தைகளையும், அவர்களது பெற்றோர், மற்றும் அம்மருத்துவமனையில் பணியாற்றுவோர் என 800க்கும் மேற்பட்டோரை, டிசம்பர் 22, இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை சந்தித்த வேளையில், இவ்வாறு கூறினார்.

புனித 6ம் பவுல் அரங்கத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் துவக்கத்தில், குழந்தைகளின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றதையடுத்து, மூன்று குழந்தைகள், ஞானிகளின் வேடமணிந்து, நம்பிக்கை, அன்பு, அமைதி என்ற மூன்று பரிசுகளை திருத்தந்தையிடம் கொணர்ந்தனர்.

குழந்தைகள் வழங்கிய மூன்று பரிசுகள்

குழந்தைகளின் ஆர்வமான ஆடல், பாடல் நிகழ்ச்சிகளையும், அவர்கள் கொணர்ந்த பரிசுகளையும் பாராட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தைகள் தன்னிடம் கொணர்ந்த நம்பிக்கை, அன்பு, அமைதி என்ற மூன்று பரிசுகளை மையப்படுத்தி, குழந்தைகளுடன் ஓர் உரையாடலை மேற்கொண்டார்.

இவ்வுலகிற்கு எது மிகவும் அழகைத் தருகிறது, அமைதியா? போரா? என்று திருத்தந்தை கேட்டவேளையில், குழந்தைகள் மிக உற்சாகமாக, 'அமைதி' என்று பதிலளித்தனர்.

அந்த அமைதியை நிலைநாட்ட அன்பு தேவை என்பதையும், இந்த அன்பு உலகில் தொடரும் என்ற நம்பிக்கை குழந்தைகளுக்கு வழங்கப்படவேண்டும் என்பதையும் தன் உரையில் வலியுறுத்திக் கூறினார் திருத்தந்தை.

1922ம் ஆண்டு நிறுவப்பட்ட மருந்தகம்

1922ம் ஆண்டு, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களால் நிறுவப்பட்ட சாந்தா மார்த்தா மருந்தகத்தை, 2005ம் ஆண்டு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் பார்வையிட்டார் என்பதும், 2008ம் ஆண்டு, இம்மருந்தகம், பாப்பிறை அறக்கட்டளையாக மாறியது என்பதும் குறிப்பிடத்தக்கன.

300க்கும் அதிகமான குழந்தைகளுக்குப் பணியாற்றும் இந்த மருத்துவமனையில், புனித வின்சென்ட் தே பால் துறவு சபையின் அருள் சகோதரிகள், மருத்துவர்கள், தாதியர் மற்றும் உதவியாளர்கள் என 55 பேர் பணியாற்றுகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 December 2019, 15:05